இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் கவலையளி்க்கும் சீரம் நிறுவனத்தின் அறிவிப்பு

தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான மேலும் 3 மாதங்கள் தட்டுப்பாடு நீடிக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இந்த இரு நிறுவனங்களிடமும் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யும்

  மத்திய அரசு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் விதமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி டோஸ் மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் மருந்துகளையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. இந்த மருந்துகளை இந்த மாதத்திற்குள் சப்ளை செய்துவிடுவோம் என இரு நிறுவனங்களும் கூறியுள்ள நிலையில், புதிதாக மத்திய அரசு ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  தேவையான டோஸ்கள் இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாநிலங்கள் தொடங்கவில்லை. அத்துடன் பல மாநிலங்கள் தடுப்பூசி மருந்து இல்லாமல் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த தட்டுப்பாடு இன்னும் 3 மாதங்கள் நீடிக்கும் என சீரம் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

  தற்போது மாதத்திற்கு 7 கோடி டோஸ் வரை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், உற்பத்தியை 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதைவிட அதிகமாக உற்பத்தி செய்ய தயாராக இருந்தாலும், அந்த அளவுக்கு ஆர்டர் வரவில்லை என்றும், இப்போதுதான் சில மாநில அரசுகள் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். உற்பத்தியை விரிவாக்கம் செய்ய இருப்பதால், 3 மாதங்களில் தட்டுப்பாடு சரியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  தடுப்பூவி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: