மூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்: உ.பி.யில் கொடுமை - ஒரு மருத்துவர் கூட இல்லை

மூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்: உ.பி.யில் கொடுமை - ஒரு மருத்துவர் கூட இல்லை

உ.பி. மாவட்ட மருத்துவமனை

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அனைத்துப் பகுதிகளையும் அனைத்து பகுதிகளிலிருந்தும் தாக்கி வருகிறது. உத்தரப் பிரதேச ஊரக அரசு மருத்துவமனைகள் போதிய வசதியின்றி மருத்துவர்கள் இன்றி திணறி வருகிறது.

  • Share this:
    கிழக்கு உத்தரப் பிரதேச ஊரக மாவட்டங்களான பாலியா மற்றும் காஜிப்பூரில் சுமார் 10,000 கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் ஒரு வசதியுமின்றி திணறி வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முறையே 36 லட்சம், 32 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இங்கு கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரிக்க சுகாதார அமைப்பு உடைந்து நொறுங்கியுள்ளது. காரணம் கிராமப்புறங்களிலிருந்து இந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா பாதித்த நோயாளிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இரு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 10,000 கொரோனா நோயாளிகள் இருக்கையில் இங்கு முறையே 255 மற்றும் 900 மருத்துவமனைப் படுக்கைகளே உள்ளன.

    இந்நிலையில்தான் பாலியா மாவட்ட மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சுமார் 20 பேர் தரையில் படுத்திருந்தனர் அவர்களிடமிருந்து முனகல்களும் காய்ச்சல், மூச்சுத்திணறுவதற்கான குரல்களும் எழுந்தன, ஆனால் ஒரு மருத்துவர் கூட அங்கு இல்லை என்று ஆங்கில ஊடக நிருபர்கள் நேரில் சென்று பார்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    ஒரு பெண் நோயாளியின் ஆக்சிஜன் லெவல் 40 ஆகக் குறைந்திருந்தது. இவரின் உறவினர்கள் இந்த பெண்ணை தரையில் கிடத்தி விட்டு மருத்துவமனை முழுதும் மருத்துவரைத் தேட ஒருவரும் இல்லை.

    இன்னொரு காட்சியும் மிகக் கொடூரமானது என்று அந்த நிருபர்கள் வர்ணித்துள்ளனர், ஸ்ட்ரெச்சரில் ஒருவர் இறந்து கிடக்கிறார், அவரது காலிலிருந்து செருப்புகள் கீழே விழுந்து கிடந்த காட்சியைக் கண்டுள்ளனர்.

    காஜிப்பூரில் உள்ள மருத்துவமனையிலும் இதே நிலைமைதான். இங்கும் 40 கிமீ தொலைவிலிருந்து பைக், ரிக்‌ஷா என்று கொரோனா நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஒரேயொரு மருத்துவர் இருக்கிறார், அவர் தி பிரிண்ட் ஊடகத்துக்குக் கூறும்போது, “இது இப்போது போர் அறை, இங்குள்ளவர்கள் அனைவருமே கோவிட் பாசிட்டிவ், வைரஸ் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தாக்குகிறது. வெகு சீக்கிரத்தில் எங்கள் மூளையும் செயலிழந்து விடும்” என்றார்.

    இதில் கிராமப்புறங்களில் சொத்து தகராறு, வாய்க்கால் தகராறில் வெட்டுக்குத்து காயம்பட்ட நோயாளிகள் எமர்ஜென்சி அறையில் வந்து படுத்துக் கொள்கின்றனர் என்று மருத்துவர் ஒருவர் எரிச்சலுடன் தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கே படுக்கை இல்லை, இவர்கள் கொழுப்பெடுத்து சண்டைப் போட்டுக் கொண்டு இங்கு வருகின்றனர் என்கிறார் அந்த மருத்துவர்.

    இப்படியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் நகரப்பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட கஷ்டங்கள் என்றால் ஊரகப்பகுதிகளில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்மை என்று பெருங்குழப்ப நிலையில் உள்ளது உத்தரப் பிரதேசம்.
    Published by:Muthukumar
    First published: