கொரோனா வைரஸ் - அமெரிக்க உளவு நிறுவனத்தின் அறிக்கையால் திடீர் திருப்பம்

கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அரசின் முக்கிய புள்ளிகள் அழுத்தமாக கூறி வரும் நிலையில், உளவு அமைப்பின் இந்த அறிக்கை திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் - அமெரிக்க உளவு நிறுவனத்தின் அறிக்கையால் திடீர் திருப்பம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: May 1, 2020, 8:01 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ், சீனாவின் ஊஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து வெளியாகியிருக்கலாம் என்று அமெரிக்க கூறி வந்த நிலையில், அமெரிக்க உளவு நிறுவனங்கள் இது மனிதரால் உருவாக்கப்பட்ட வைரஸ் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்கா ஆரம்பம் முதலே சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி அமெரிக்கா - சீனா இடையேயான மோதலுக்கு அடித்தளமிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை அதிகாரிகளும் அதனை பின்பற்ற, ஊஹான் வைரஸ் என்று விமர்சித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் வாஷிங்டன் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு கட்டுரை எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. ஊஹானில் உள்ள உயிரி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட கிருமி தான் கொரோனா வைரஸ் என்றும், அது தவறுதலாக வெளியில் வந்திருக்கலாம் என்றும் எழுதியிருந்தது வாஷிங்டன் டைம்ஸ். குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் காட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.


இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்த சீனா மற்ற நாடுகளைப் போலவே கொரோனாவால் தாங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறியது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனாவை பரப்பியது என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் பரபரப்பூட்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.

அமெரிக்காவில் 3 கோடியே 40 லட்சம் பேர் இன்ஃபுளுயன்ஸாவால் பாதிக்கப்பட்டதாகவும், 20,000 பேர் இறந்ததாகவும் அமெரிக்க அரசு கூறுகிறது. இதில் எத்தனை பேர் கொரோனாவால் இறந்தார்கள் என்ற உண்மையை வெளியிட முடியுமா? என்று கேட்டு ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்ட ஸாவோ இதன் மூலம் சீனாவில் பரவுவதற்கு முன்பே அமெரிக்காவில் கொரோனா பரவியிருந்தது என்று குற்றம்சாட்டியிருந்தார்

இப்படி இருதரப்பும் இருக்க சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அந்நாடு மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார் அதிபர் டிரம்ப். முன்கூட்டியே மற்ற நாடுகளை எச்சரித்திருந்தால் கொரோனா பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம் என்று கூறிய டிரம்ப் சீனாவிற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா கொரோனா விவகாரத்தில் தாங்கள் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும், அமெரிக்காவின் விசாரணையை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் காட்டமாக பதிலளித்தது.

சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா பரவல் குறித்தான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சீனாவிடம் மிகப்பெரிய தொகையை நஷ்ட ஈடாகக் கோரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சீனா தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக அமெரிக்க அரசியல்வாதிகள் பொய்யான தகவல்களை கூறிக்கொண்டிருப்பதாக சாடியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்று அமெரிக்க தேசியப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வைரஸின் தோற்றம் குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அமெரிக்காவின் தேசியப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ், விலங்குகளின் தொடர்பிலிருந்து தொடங்கப்பட்டதா அல்லது ஆய்வுக்கூட விபத்தில் இருந்து ஆரம்பித்ததா? என்று தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க தேசியப்புலனாய்வுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அரசின் முக்கிய புள்ளிகள் அழுத்தமாக கூறி வரும் நிலையில், உளவு அமைப்பின் இந்த அறிக்கை திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.










First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading