கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு இந்தியா, அமெரிக்கா உட்பட 20 நாட்டினர் சவூதி அரேபியாவுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பயணத் தடை தூதர்கள், சவுதி குடிமக்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த தடை குறுகிய காலமானது என்றும் புதன்கிழமை இரவு 9 மணி முதல் பயண தடை அமலுக்கு வரும் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவு எகிப்து மற்றும் அண்டை நாடான யுஏஇ-க்குப் பொருந்தாது.
மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்தது. இப்போது தடைசெய்யப்படும் நாடுகளின் பட்டியல் நீண்டுள்ளது.
இப்போது லெபனான், இத்தாலி, துருக்கி, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்வீடன், மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் தடைப்பட்டியலின் கீழ் வந்துள்ளன. இந்தியா அமெரிக்கா உட்பட பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய தென் அமெரிக்க நாடுகளும், இந்தோனேசியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் தடைப்பட்டியலில் உள்ளன.
இதோடு மட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட இந்த நாடுகள் வழியாக இந்தத் தடை அமலாவதற்கு 14 நாட்களுக்கு முன் பயணம் செய்தோருக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.68 லட்சமாக உள்ளது. இதுவரை 6,383 பேர் பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் கூறியுள்ளது.