கடந்த ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரவல் தடுப்பு லாக் டவுன் காரணமாக இந்தியாவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததாக அமெரிக்க ஆய்வு ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தலைவிரித்தாடுகிறது, முக்கிய நகரங்களிலிருந்து வரும் செய்திகள் நாட்டின் சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாகவே நம்மை யூகிக்க வைக்கிறது.
Pew Research Center என்ற அமெரிக்க அறிவுஜீவிகளால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் முதல் அலை பரவலில் இந்தியாவில் வறுமை இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.
உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தேசிய அளவிலான லாக் டவுன் காரணமாக இந்திய மக்களின் வருவாய் கடுமையாக சரிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றினால் அனைத்து தொழிற்துறைகளும் பின்னடைவு கண்டன, இதனால் முறைசார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழில்கள் நசிந்து கோடிக்கணக்கானோர் வேலையை இழந்தனர்.
வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் ஜிடிபி கடும் சரிவு கண்டது. பொருளாதார தேக்கத்தின் அனைத்து துயரங்களையும் தாக்கங்களையும் ஏழை மக்களே சுமந்தனர்.
ஆய்வுக்காக இந்த ஆராய்ச்சி மையம், நாளொன்றுக்கு 2 டாலருக்குக் குறைவாக சம்பாதிப்பவர்களை ஏழை என்றும், 2.1 டாலர் முதல் 10 டாலர்கள் வரை நாளொன்றுக்கு வருவாய் ஈட்டுவோரை குறைந்த வருவாய் உடையோர் என்றும், நாளொன்றுக்கு 10.1 டாலர் முதல் 20 டாலர்கள் வரை வருவாய் ஈட்டுவோரை நடுத்தரப் பிரிவினர் என்றும் 20.1 டாலர் முதல் 50 டாலர் வரை தினசரி வருவாய் ஈட்டுவோரை மேல் நடுத்தரப் பிரிவு என்றும் நாளொன்றுக்கு 50 டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவோரை உயர் வருவாய் பிரிவாகவும் பிரித்துக் கொண்டனர்.
இதில் முதல் ரகமான 2 டாலர் அதற்கும் கீழ் தினசரி வருவாய் உடையோர் எண்ணிக்கை 6 கோடியிலிருந்து 13.4 கோடியாக அதிகரித்துள்ளது. ஆகவே ஏழைமக்களின் வறியோர் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்தது. பொருளாதார பின்னடைவினால் இந்தியாவின் மிடில் கிளாஸ் வர்க்கத்தினரும் 3.2 கோடி குறைந்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி இவர்கள் எண்ணிக்கை 9.9 கோடியாக இருந்துள்ளது. இப்போது 6.6 கோடியாக குறைந்துள்ளது.
ஆனால் தங்கள் ஆய்வு மாதிரியை விட உண்மை நிலவரம் மோசமாகவே இருக்கும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
2019- ஐநா தகவல்களின் படி இந்திய மக்கள் தொகையில் 36.4 கோடி பேர் வறுமையில் வாடுபவர்கள். அதாவது மக்கள் தொகையில் 28%. இது 2020- கோவிட் லாக்டவுனினால் கூர்மையாக அதிகரித்திருக்கும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இதை மேலும் மோசமாக்கும் விதமாக கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது.
கொரோனா வாக்சின் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு படுவேகமாக இதிலிருந்து வெளியே வர வேண்டும் இல்லையேல் மே மாதத்துக்குப் பிறகு இதன் தாக்கத்தினால் பெரிய அளவில் வேலையின்மையும் வருவாயும் குறையும் இதனால் வறுமை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Poverty