மருத்துவமனையில் கூடுதல் சுகாதார பணியாளர்களை நியமிக்க கிரண்பேடி தடையாக உள்ளார் - புதுவை அமைச்சர் காட்டம்

கிரண்பேடி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

மருத்துவமனையில் கூடுதல் சுகாதார பணியாளர்களை நியமிக்க ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக புதுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவரும் அரசின் கோவிட் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் அடிக்கடி எழுந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ பதிவு செய்யும் சிகிச்சை பெறுபவர்கள் தங்களது வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்கிறார்கள். இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சத்துள்ளதாக இருக்கிறாதா என்பன குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு இன்னும் ஊட்டச்சத்தான உணவு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கோவிட் மருத்துவமனையில் சுகாதாரமாக வைத்திருக்க, கூடுதல் சுகாதார பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் விடுத்துள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் கொரோனா நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறேன். மேலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை மத்திய அரசு அளித்தாலும் அதனை ரேஷன் கடை மூலம் விநியோகிக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார்.

ஆசிரியர்கள் மூலம்தான் மக்களுக்கு அரிசி கொடுக்க வேண்டுமென அவர் கூறுகிறார். அரிசி வழங்குவது ஆசிரியர்கள் வேலை அல்ல; ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசியை வழங்கினால் 5 நாட்களுக்குள்  அனைவருக்கும் அரிசி சென்றுவிடும் என்றார்.

Also read: கொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம் - அதிபர் புடின்

கிரண்பேடி தன்னை ஒரு மருத்துவர் போல் நினைத்துக் கொண்டு தவறான முடிவுகளை எடுத்து வருவதாகவும், கோவிட் மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்த கூடுதல் சுகாதார பணியாளர்களை நியமிக்க அவர் தடையாக இருக்கிறார் என்றும் கூறிய அவர், கிரண்பேடி ரியல் ஹீரோ அல்ல என்றார்.

மேலும் கூறுகையில், கோவிட் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்யாமல் அங்குள்ள வசதிகளை மேம்படுத்த தடையாக இருக்கும் கிரண்பேடி முடிந்தால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; இல்லையென்றால் மூன்று மாதங்களுக்கு முன்பு தூங்கியது போல் தூங்க வேண்டும் என ஆவேசத்துடன்  கூறியுள்ளார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
Published by:Rizwan
First published: