covid in India | உலக கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது: WHO கவலை

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

உலக அளவில் கொரோனா இன்னும் பின்னடைவு கண்டபாடில்லை என்றாலும் பிறநாடுகளை ஒப்பிடும்போது இன்று உலக அளவில் பதிவாகும் மொத்த கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் பதிவாகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்படும் தினசரி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 2 கோடியை கடந்து விட்டது.

    இந்தியாவில் இருமுறை உருமாறிய E484Q மற்றும் L452R, என்ற கொரோனா வைரஸ் வகை பெரிய அளவில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது.

    உலக அளவில் கடந்த வாரம் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கடந்த வாரத்தில் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு பலியாகினர்.

    இந்த நிலையில், உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர பெருந்தொற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பெருமளவில் பதிவாகமல் இருக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன்படி பார்த்தால் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பல மாநிலங்களிலிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கும் மருத்துவமனை, இடுகாடுகளிலிருந்து வரும் தகவல்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை பல ஊடகங்கள் சுட்டிக்காட்டியபடியேதான் உள்ளன.

    அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 42,000 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 409 ஆக உள்ளது.
    Published by:Muthukumar
    First published: