கொரோனா பாதித்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 28 நாட்கள் விடுப்புடன் சம்பளம்: யோகி ஆதித்யநாத் மீண்டும் உத்தரவு

யோகி ஆதித்யநாத்

கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 • Share this:
  உத்தரபிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஓர் உத்தரவிட்டிருந்தது. அதில், கரோனா வைரஸ் தொற்றால் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 28 நாட்கள் விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை.

  கொரோனா இரண்டாவது அலையால் கடந்த வருடத்தை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அதே விதிமுறைகளை தனியாருக்காக மீண்டும் ஒரு உத்தரவாக பிறப்பித்துள்ளது. இதில் கரோனா தொற்று கொண்டப் பணியாளர்களுக்கு 28 நாட்களுக்கான விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  இந்த உத்தரவு தொடர்பாக உத்தரபிரதேச அரசின் தொழிலாளர் துறையின் கூடுதல் செயலாளரான சுரேஷ் சந்திரா, “கடந்த வருடம் மார்ச் 20ல் அரசுபிறப்பித்த உத்தரவை அனைத்து ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் ஆணையர்கள் தீவிரமாக அமலாக்க வேண்டும். இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கரோனாவிற்காகத் தற்காலிகமாக மூடப்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடை களும் தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

  உ.பியில் கொரோனா நிலவரம் படுமோசமாகிக்கொண்டிருக்கிறது, மே மாதத்தில் உ.பி. கொரோனா ரெட் மாநிலமாக மாறும் மையமாக மாறும் என்று நிபுணர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.

  ஆக்சிஜன் தட்டுப்பாடு அங்கு நிலவுகிறது, ஆனால் யாராவது இப்படிச் சொன்னால் அவர்கள் மீது வதந்தி பரப்புவதாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது, தன் தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு ட்விட்டர் பதிவு மேற்கொண்ட பேரன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீஸ்.

  மேலும், உ.பி. மாநிலம் ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மூச்சு திணறல் ஏற்பட்ட கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்துள்ள மனைவியின் புகைப்படம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

  தனது கணவரின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று ரேணு வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசம் வழங்கி உள்ளார். ஆனால் கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
  Published by:Muthukumar
  First published: