• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • EXCLUSIVE: வடமாநிலங்களைப் போல் தமிழகத்திலும் தவிக்கும் கொரோனா நோயாளிகள்

EXCLUSIVE: வடமாநிலங்களைப் போல் தமிழகத்திலும் தவிக்கும் கொரோனா நோயாளிகள்

கோவிட் -19

கோவிட் -19

தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிட் முழு பாதுகாப்பு முறைகளுடன் சென்றோம்.

  • Share this:
வடமாநிலங்களைப் போல் தமிழகத்தில் படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அரசும், அரசு இயந்திரமும் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. கொரோனா 2ம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கள எதார்த்தம்தான் என்ன? உண்மை நிலை அறிய களத்தில் இறங்கியது நியூஸ்18 புலனாய்வுக் குழு…. அதில் நமக்குக் கிடைத்த காட்சிகள் பகீர் ரகம்….

கல்நெஞ்சையும் பதற வைக்கும் இதுபோன்ற காட்சிகளை சமூக வலைத்தளங்களிலும், வடமாநிலங்களிலும் பார்த்திருப்போம். இப்போது, தமிழகத்திலும் இதேநிலைதான் என்றால் நம்ப முடிகிறதா? தலைநகராம் சென்னையில் நியூஸ்18 புலனாய்வுக்குழு காட்சிப்படுத்தியவைதான் இவை. கொரோனா இரண்டாவது அலையின் கோர முகத்தை இதைவிட அருகில் யாரும் காட்சிப்படுத்திவிட முடியாது.

தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிட் முழு பாதுகாப்பு முறைகளுடன் சென்றோம். முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவரை பார்க்க காத்திருக்கும் பகுதியை அடைந்தோம். படுக்கைகளுக்காக மருத்துவமனையில் யாரும் காத்திருக்கத் தேவையில்லை என அதிகாரிகள் கூறிவரும் நிலையில், களத்தில் நாம் பார்த்த காட்சிகள் அதிர்ச்சியளித்தன.

படுக்கை வசதி இல்லாததால், நீண்ட நேரம் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள் என மருத்துவர்களே சொன்னதையும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கனத்த மனதோடு அங்கிருந்து புறப்பட்ட நமது புலனாய்வுக்குழு மற்றொரு அரசு மருத்துவமனையின் பிரத்யேக கொரோனா வார்டின் உள்ளே சென்றது.

பிரமாண்ட கட்டடத்தின் நடைபாதை, வராண்டா, செவிலியர் அறைகள், மருத்துவர் அறைகள் என கண்ணில்பட்ட இடங்களில் எல்லாம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. படுக்கைகள் முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. தலைநகர் சென்னையிலேயே இந்த நிலை எனில் புறநகர் பகுதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

பல்லாவரம் ,மேடவாக்கம், சோழிங்கநல்லூர் தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், என பிராதான புறநகர் சென்னைக்கு ஒரே அரசு மருத்துவமனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தான்.

குரோம்பேட்டை அரசுமருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கோ அனுப்பப்படும் நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் வசதியும் போதிய அளவில் இல்லாததால், நோயாளிகள் தாங்களாகவே பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். இதனால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது

குரோம்பேட்டையைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றது நமது புலனாய்வு குழு… அங்கும் நமக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. சற்று உள்ளே சென்று தனிமைபடுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்றோம்
தனிமை படுத்தப்பட்ட வார்டில் போதிய பணியாளர்கள் இல்லாததால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளியுடன் அவர்களது உறவினர்களும் இருந்தது நம்மை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

சிறப்பான தீவிரசிகிச்சை பிரிவுகளும் ,ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க சில ஏற்பாட்டையும் இங்கு அதிகாரிகள் எடுத்து வந்ததையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இதே போன்று பிரபல தனியார் மருத்துவமனை சிலவற்றிற்கு சென்றோம் எங்கும் படுக்கை வசிகள் இல்லை அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பை கண்ணீருடன் பதிவு செய்து விட்டோம் என்னதான் மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள் இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் அதிகரித்து கொண்டே தான் போகும். இதை பார்த்தாவது பாதிப்பின் வீரியத்தையும் மருத்துவ பணியாளர்களின் சேவையும் உணர்ந்து முறையான தடுப்பு முறைகளையும் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டால் பாதிப்பை குறைக்கலாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: