COVID-19 crisis | இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமெனில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம்: உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் தொற்றை விரட்டி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப 70% மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  • Share this:
    உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹேன்ஸ் க்ளூஜ் இது தொடர்பாகக் கூறியதாவது:

    இந்தியாவில் பரவி வரும் பி.617 உருமாறிய கொரோனா வைரஸ் வகை பிரிட்டனின் பி.117 வைரஸ் வகையை விட பரவும் வேகம் அதிகம் கொண்டது என்பதை நாம் அறிவோம். முந்தைய வைரசை விட இது அதி வேக தொற்றுக்கு உரியது என்பதையும் நாம் கண்டு வந்துள்ளோம்.

    உலகம் முழுவதும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

    கோவிட் தொற்று குறைந்தால் தொற்று முடிந்துவிட்டதாக எண்ணிக் கூடாது. பல்வேறு நாடுகளில் பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    உலக மக்கள் தொகையில் இதுவரை 10 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

    நாம் அறிவியலையும் அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும், என்றார்.

    மத்திய ஆசியாவில் 26% மக்கள் தொகைக்கு வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 36.6% மக்களுக்கு வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் ஒரு டோஸ் செலுத்தப்பட்ட மக்கள் தொகையாகும்.

    கோவிட்-19 தொற்றுக்கு ரெட் கார்டு காட்டுங்கள், கூடுதல் நேரம் அதற்கு அளிக்காதீர்கள் என்கிறார் க்ளூஜ்.

    “சில நாடுகள் ஆரோக்கியமாக உள்ள இளம் மக்களுக்கு வாக்சின் செலுத்தத் தொடங்கியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இன்னும் சில நாடுகளில் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் வாக்சின் செலுத்தவில்லை. இவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் க்ளூஜ்.
    Published by:Muthukumar
    First published: