கோவாக்சின் Vs கோவிட்ஷீல்டு Vs 7 தடுப்பூசிகள்! இவற்றின் செயல்திறன் என்ன?

தடுப்பூசி

கோவாக்சின், கோவிட்ஷீல்டு மற்றும் பைசர், மாட்ரெனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

  • Share this:
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் உருமாறிய வேரியண்டான சார்ஸ் கோவிட் 2 இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபின்னர், தொற்றின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 183.01 மில்லியன் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 3.96 மில்லியன் பேர் இறந்துள்ளனர்.

கோவாக்சின், கோவிட்ஷீல்டு மற்றும் பைசர், மாட்ரெனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், அந்த தடுப்பூசிகள் கொரோனா பரவலை எந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

பைசர் - பயோ என்டெக் (Pfizer-BioNTech)

பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அவசர கால அனுமதியைக் கொடுத்தது. இந்த தடுப்பூசி முதல்முதலாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஆல்பா, பீட்டா வேரியண்ட் வைரஸூக்கு எதிரான சோதனை முயற்சியில் கடுமையான நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 95 விழுக்காடு பாதுகாப்பை கொடுத்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸூக்கு எதிராக, 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 8 8%, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 96 % பாதுகாப்பையும் கொடுக்கிறது.

மாட்ரெனா (Moderna)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர காலத்தில் உபயோகிக்க அமெரிக்காவால் 2வதாக அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி மாட்ரெனா. எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த தடுப்பூசி அறிகுறியில் இருந்து 94.1% பாதுகாப்பை கொடுக்கிறது. முறையான சோதனையில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு குறைவான பாதுகாப்பு முடிவுகளை மட்டுமே கொடுத்து. சில ஆய்வு முடிவுகளில் ஆல்பா மற்றும் பீட்டா வேரியண்டுகளுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசி நல்ல பாதுகாப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

Also Read : கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை ‘டெல்டா வேரியண்ட்’ மீண்டும் தாக்குமா?

ஜான்சன் & ஜான்சன்

இந்த ஆண்டு பிப்ரவரியில் அவசர கால பயன்பாட்டுக்கு ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. மாட்ரெனா மற்றும் பைசர் தடுப்பூசிகள் 2 டோஸ் எடுக்க வேண்டியிருக்கும் நிலையில், இந்த தடுப்பூசி ஒரே ஒரு ஷாட் தடுப்பூசி மட்டும் எடுத்தால் போதும். ஸ்டோர் செய்வதற்கும் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக அனுப்புவதற்கு உகந்ததாக உள்ளது. கொரோனா வைரஸூக்கு எதிராக 72 விழுக்காடு பலனைக் கொடுக்கிறது. அமெரிக்க ஆய்வின்படி ஒட்டுமொத்தமாக 86 % பாதுகாப்பையும், தென் ஆப்பிரிக்காவில் 64 விழுக்காடு பாதுக்காப்பையும் கொடுக்கப்பதாகவும், கடுமையான பாதிப்புகளுக்கு 82 % பாதுகாப்பை கொடுக்கிறது.

ஆஸ்டிரா ஜென்கா (AstraZeneca)

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை போன்ற ஆஸ்டிரா ஜென்கா தடுப்பூசியில் அடினோவைரஸில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளில் கடுமையான தொற்றுகளை 15 நாட்களில் குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக 76 விழுக்காடு பாதுகாப்பையும், கடுமையான தொற்றுகளுக்கு எதிராக 100 விழுக்காடு பாதுகாப்பையும் கொடுக்கிறது. 65 வயதுக்கும் மேற்பட்டவர்களை 85 விழுக்காடு தொற்றில் இருந்து பாதுகாப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நோவாவாக்ஸ் (Novavax)

நோவாவாக்ஸ் தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக மட்டுமின்றி, பிரிட்டனில் பரவிய உருமாறிய வைரஸையும் கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனை ஒப்பிடும்போது தென்ஆப்பிரிக்காவில் ஒப்பீட்டளவில் குறைவான பலனைக் கொடுக்கிறது. 65 வயதுக்கும் மேற்பட்ட வயதினருக்கு தொற்று பாதிப்பில் இருந்து 91 % பாதுகாப்பை கொடுப்பதாக கூறியுள்ள ஆஸ்டிரா ஜென்கா, பல்வேறு பக்க நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடையே 93 % பாதுகாப்பை கொடுப்பதாக கூறியுள்ளது. மற்றவர்களுக்கு 100% பாதுகாப்பை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

கோவிட்ஷீல்டு

ஆஸ்டிரா ஜென்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கியுள்ள கோவிட்ஷீல்டு, இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. 3வது கட்டமாக மேற்கொள்ளப்பட்ட முதன்மை ஆய்வுகளின் முடிவுகளில் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 76 % பாதுகாப்பை கொடுப்பது தெரியவந்துள்ளது. 12 வார கால இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 82 விழுக்காடு பாதுகாப்பை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

Also Read : கொரோனா தடுப்பூசியால் உடலில் ஏற்படும் சில அறிகுறிகள்: இளைஞர்கள், முதியவர்களில் எவ்வாறு வேறுபடுகிறது?

ஸ்புட்னிக் வி (Sputnik V)

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்படுகிறது. பிரபல மருத்துவ இதழான லான்சட் இதழில் வெளியாகியுள்ள இந்த தடுபூசியின் முடிவுகளில், 3வது கட்ட பரிசோதனையில் ஒட்டுமொத்தமாக 91.6% பாதுகாப்பு வழங்குவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுதப்பட்டு வரும் நிலையில், 3வதாக இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கோவாக்சின்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 77.7 % பாதுகாப்பை கொடுக்கிறது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வேரியண்டுக்கு எதிராக 65.2 விழுக்காடு பாதுகாப்பையும் வழங்குவதாக, அண்மையில் நிறைவடைந்த 3வது கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பாரத்பயோடெக் தெரிவித்துள்ளது. கடுமையான தொற்றுகளுக்கு எதிராக 93.4 விழுக்காடு, ஆரம்ப அறிகுறிகளுக்கு எதிராக 63 விழுக்காடு பாதுகாப்பையும் கொடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

சினோபார்ம் (Sinopharm)

சீனாவில் கண்டுபிடிக்கபட்ட சினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த பாதுக்காப்பை வழங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான மற்றும் டெல்டா வேரியண்டு வைரஸ்களுக்கு எதிராகவும் நல்ல பாதுகாப்பை கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியா, பிரேசில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த தடுப்பூசியின் தெளிவான ஆய்வு முடிவுகள் மற்ற நாட்டினருக்கு தெரியவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் பைசர் மற்றும் மாட்ரெனா தடுப்பூசிகளுகும் அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: