Covaxin : கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைப்பு

Covaxin : கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைப்பு

கோவேக்சின்

சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸின் விலையை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைத்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் மாநிலங்களுக்கு வழங்கும் டோஸ்க்கான விலையை அதிரடியாக உயர்த்தின.

    ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் தடுப்பூசியை கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

    முன்னதாக, கோவாக்சின் ஒரு டோஸ் விலை மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய்க்கும் வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விலையை குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.

    இந்த கோரிக்கைகளை ஏற்று, மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவாக்சின் ஒரு டோஸ் விலையை மாநில அரசுக்கு 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக குறைத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய் என்ற விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சீரம் இந்தியா நிறுவனம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியில் ஒரு டோஸ் விலையை 400 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைத்து அறிவித்தது.

    மத்திய அரசுக்கான கொள்முதல் விலையை காட்டிலும், மாநில அரசுகளுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தடுப்பு மருந்துக்கான கொள்முதல் விலையை, இரண்டு நிறுவனங்களும் குறைத்துள்ளன.

    இந்நிலையில், ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக கிடைக்கவில்லை என, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்து உள்ளது. போர்ச்சுகல் நடத்திய ஆன்லைன் சுகாதார மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் பங்கேற்றார்.

    அதில் பேசிய அவர், உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு உள்ளன என்றார். அதில் 82 சதவீத டோஸ்கள் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன எனவும் ஆனால் குறைவான வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ்களே போடப்பட்டு உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

    Must Read : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

     

    மேலும், பொது சுகாதாரமே சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் அடித்தளம் எனவும், டெட்ராஸ் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: