Exclusive | உணவில் புழு, சம்பளத்தில் முறைகேடு...! கொரோனாவுடன் சேர்த்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் அவலங்கள்

”பல இடங்களில், குப்பை வண்டியில் தான் உணவு எடுத்து செல்லப் படுகிறது. அதில் புழு உள்ளிட்ட பூச்சிகளும் கிடக்கின்றன”

Exclusive | உணவில் புழு, சம்பளத்தில் முறைகேடு...! கொரோனாவுடன் சேர்த்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் அவலங்கள்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு
  • Share this:
கொரோனா தடுப்பு பணியில் முன் களப்பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் கிடப்பதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்கள் நியூஸ் 18 கள ஆய்வில் வெளியாகியுள்ளன.

சென்னையில் தீவிரமாகிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், மாநகராட்சியில் தூய்மை பணிகளிலும், மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளிலும் 22,400 பேர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது இல்லை, என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. மேலும், இவர்களில் 400 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.


இந்த சூழலில் தான், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும், உணவிலும் முறைகேடு நடந்திருப்பது நியூஸ் 18 கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 22,400 பணியாளர்களில், 6,400 பேர் நிரந்தர பணியாளர்கள். மீதமுள்ள 16 ஆயிரம் நபர்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த தற்காலிக பணியாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 379 ரூபாய் ஒரு நாள் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு, சுய உதவிக் குழுக்கள் மூலம் இந்த சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது. இந்த சம்பளத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து பல அதிர்ச்சிகர தகவல்களை நம்மிடம் தெரிவிக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தூய்மை பணியாளர்கள் சங்க தலைவருமான எஸ்.கே.மகேந்திரன், "30 நாட்களுக்கு உரிய சம்பளம் பணம் ஒதுக்கப்பட்டு, முழு சம்பளமும் சுய உதவி குழுக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் படுகிறது.

தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.கே.மகேந்திரன்


விடுப்பில் உள்ள ஊழியர்களுக்கும் சம்பளம் ஒதுக்கப்பட்டு, அது குழு தலைவரின் கணக்கில் செலுத்தப்படுகிறது. மண்டல உதவி செயர் பொறியாளர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

மேலும், பணிக்கு வந்த பணியாளர்கள் சிலரது கணக்கில் 1000 முதல் 2000 ரூபாய் வரை குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது" என்றார்.

மேலும், "களப்பணி செய்யும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கப் படுகிறது.
இதிலும் ஊழல் நடைபெறுகிறது. தூய்மை பணியாளர்களில் படித்த நபர்களின் பெயர்களை களப் பணியிலும் சேர்த்து, ஒரே நபருக்கு இரண்டு சம்பளம் ஒதுக்கப்பட்டு, ஒரு சம்பளம் முறைகேடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உண்மையில் பணியாற்றும் நபர்களுக்கு அந்த பணம் சென்று சேர வேண்டும்" என தெரிவித்தார் மகேந்திரன்.

இதுதவிர, மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்க, 100 ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்தந்த மண்டல அதிகாரிகளின் பொறுப்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

"15 மண்டலங்களிலும் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. காலை உணவுக்கு 35 ரூபாயும், மதியத்திற்கு 65 ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த உணவு சுகாதாரமாக வழங்கப் படவில்லை.

பல இடங்களில், குப்பை வண்டியில் தான் உணவு எடுத்து செல்லப் படுகிறது. அதில் புழு உள்ளிட்ட பூச்சிகளும் கிடக்கின்றன. இதிலும் முறைகேடு நடக்கிறது" எனக் கூறிய மகேந்திரன், "தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்க மட்டும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் அவ்வளவு பணம் செலவு செய்து எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனவே, சென்னை மாநகராட்சி கணக்குகள் அனைத்தும் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே முறைகேடுகள் தடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, "அது போன்ற சம்பள முறைகேடு நடைபெற்றதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும், இனி அது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

மேலும், "உணவு சுகாதாரம் அற்ற முறையில் விநியோகிக்கபட்டது குறித்து சில புகார்கள் வந்துள்ளதாகவும், இனி தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தனர்.

கொரோனா பேரிடரில் இருந்து சென்னை மக்களை காப்பாற்ற உழைத்து கொண்டிருக்கும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை தேவைகளில் கூட அலட்சியம் காட்டுவது, பணியாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி ஆணையர் பதில்

இந்த விவகாரங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் விளக்கம் கேட்ட போது, "சம்பள முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது மண்டலம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும், "சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகிக்க பட்டது குறித்து சில புகார்கள் வந்துள்ளதாகவும், இனி தரமான உணவு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading