Exclusive : கொரோனா பரவல் குறித்து உண்மையை கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Exclusive : கொரோனா பரவல் குறித்து உண்மையை கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

மாநகர ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது உண்மைதான் என்றும், ஆபத்தான சூழல் உருவாகி இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

  • Share this:
    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆயிரம் மாணவிகள் மற்றும் 35 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 55 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த மாணவிகளின் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்திய சோதனையில், 9 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 8 பள்ளிகளை சேர்ந்த 68 மாணவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அரசு தான் முடிவு செய்யும் என கூறினார்.

    சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது உண்மைதான் எனவும், களப்பணியில் நான்காயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், சென்னையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நேரு மைதானத்தில், ஒரே நாளில் மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தடுப்பு வழிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், சென்னையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி தரவும், சென்னையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

    ஒரு தெரு அல்லது வீட்டில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டால், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் கவனிப்பு மையங்களுக்கு தேவையான மருத்துவ பணியாளர்களை நியமித்து, உரிய வசதிகளை ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: