Coronavirus : கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கவனித்து கொள்வது!

கோவிட்-19

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி எங்கும் போடப்படவில்லை. கோவிட்-19 முதல் அலையின் போது அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் இந்த இரண்டாம் அலையில் சிக்கி அதிகம் பாதிக்கப்பட்டு வருவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

  • Share this:
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கோவிட்-19 முதல் அலையின் போது அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் இந்த இரண்டாம் அலையில் சிக்கி அதிகம் பாதிக்கப்பட்டு வருவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

கோவிட்-19 இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 1-8 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தாலும் அல்லது அறிகுறியற்ற நிலை மற்றும் சூப்பர்-ஸ்ப்ரெடர்களாக (super-spreaders) இருந்தாலும், அவை எளிதில் கடுமையான நோய்க்கு வழிவகுக்கும்.

இந்த இக்கட்டான நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தையை கவனித்து கொள்வதும், கூடவே தங்கள் சொந்த ஆரோக்கியத்தை கவனிப்பதும் மிகவும் சவாலான ஒரு விஷயமே. பெரியவர்களே கொரோனா தடுப்பு விதிகளை சரியாக பின்பற்ற தவறும் நிலையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்துவது கடினம்.

எனினும் குழந்தைகள் மூலம் உங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க COVID-19 விதிமுறைகளைப் பின்பற்றும்படி செய்வது அவசியமாகிறது. ஒருவரது குழந்தை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களை எவ்வாறு கவனித்து கொள்வது என்ற எளிய கேள்விகளுக்கு பதில் காணலாம்.



புதிய வேரியண்ட் ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது?

தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு முந்தையதை ஒப்பிடும் போது குழந்தைகளை பாதிக்கும் அதிக போக்கை கொண்டுள்ளது. பெரும்பாலும் வெளியில் செல்லும் பெரியவர்களிடமிருந்து குழந்தைகள் தங்களுக்குள் வைரஸை ஒட்டி கொள்கிறார்கள். டபுள் மியுடன்ட் வேரியண்ட் (double mutant variant ) சுவாசக் குழாயில் தொற்று ஏற்படுத்தும் போக்கை கொண்டுள்ளது.

முதல் அலையின் போது கூட குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் அறிகுறியற்றவர்களாக இருந்தனர். ஆனால் இந்த இரண்டாம் அலையில் பெரும்பாலான குழந்தைகள் MISC (குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி) அனுபவிக்கிறார்கள் மற்றும் லேசான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள்.



குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான COVID-19 அறிகுறிகள்

பெரியவர்களை போலவே, கொரோனா வைரஸின் அறிகுறிகளும் மேல் சுவாசக் குழாயில் மட்டும் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை. புள்ளிவிவரங்களின் படி பெரும்பாலான குழந்தைகள் அதிக காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை புண், சோர்வு, தசை வலி, மற்றும் மியூகோகுட்டானியஸ் அழற்சி அறிகுறி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இரைப்பை குடல் (ஜி.ஐ) அறிகுறிகள் வாந்தியெடுத்தல், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையும் குழந்தைகளுக்கான அறிகுறிகளில் பொதுவானவை.



குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டவுடன் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது உடனடியாக அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தான். பின்னர் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்ய பரிசோதிப்பதும், அவர்களின் ஆக்ஸிஜன் செறிவு அளவை கண்காணிக்கவும் வேண்டும். குழந்தைகளின் ஆக்ஸிஜன் செறிவு 94% ஆக இருந்தால், போதுமான நீரேற்றம், சரியான ஊட்டச்சத்து மற்றும் பாராசிட்டமால் ஆகியவற்றை கொடுத்து வரவும். தவறாமல் மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஒருவேளை நிலைமை மோசமாகிவிட்டால் தாமதிக்காமல் உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.



எவ்வளவு காலம் தனிமை?

பெரும்பாலான வழக்குகளில் கோவிட் -19ன் முதல் அறிகுறிகள் தோன்றிய 3 முதல் 5 நாட்களில் குழந்தைகள் சிறிது நார்மல் ஆகிறார்கள். அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே முன்பே இருக்கும் நிலைமைகள் காரணமாக இதை விட அதிக நேரம் எடுக்கிறது. பின்வரும் 3 நிபந்தனைகளின் கீழ் குழந்தைகளுக்கான வீட்டு தனிமைப்படுதலை பெற்றோர்கள் நிறுத்தி கொள்ளலாம்.

ALSO READ : வீட்டிற்குள் இருந்தாலும் ஏன் மாஸ்க் அணிய வேண்டும் - மருத்துவர்கள் சொல்லும் காரணம்

*அறிகுறிகள் முதலில் தோன்றியதிலிருந்து 10 நாட்கள்

* காய்ச்சலை குறைக்கும் மருந்துகள் இன்றியோ அல்லது காய்ச்சல் இல்லாமலோ தொடர்ந்து 24 மணி நேரம் கடந்தால்

* COVID-19-ன் பிற அறிகுறிகள் மறைந்த பின் ..

குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

தற்போது வரை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி எங்கும் போடப்படவில்லை. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் குழந்தைகளிடையே தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்வதற்கான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் மீது ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இரண்டும் தத்தம் தடுப்பூசிகளை பரிசோதனை செய்து, செயல்திறன் மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஆராய்சி செய்து வருகின்றன. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கோவாக்சின் 3-ஆம் கட்ட மருத்துவ சோதனைக்கு ஒப்புதல் கோரியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: