பொதுவாக நேரம், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் புவிசார் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு வைரஸும் தனது உருவத்தை மாற்றி வருகின்றன. வைரஸின் உருவ அமைப்பு மற்றும் அதன் குணாதிசயம் ஆகியவை ஒவ்வொரு மாற்றத்தின் போதும் ஏற்படும். கொரோனா வைரஸின் ஒவ்வொரு திரிபு வடிவங்களையும் ஆய்வு செய்ததில், அவை அனைத்தும் ஒன்றோடு, ஒன்று மாறுபட்டவை என்பதும், மனித உடலுக்குள் உள்நுழையும்போது வெவ்வேறு விதமான அறிகுறிகளை காண்பிக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.தற்போதைய புதிய திரிபு வடிவமான ஒமைக்ரானின் சப்-வேரியண்ட் வைரஸ் கூட ஒரிஜினல் கொரோனா வைரஸ் அமைப்பில் இருந்து வெகுவான மாற்றங்களை கொண்டுள்ளது.
ஒமைக்ரான் சப்வேரியண்ட் வைரஸை கண்டறிவதே கடினமான காரியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அதற்கு திருட்டு (ஸ்டீல்த்) ஒமைக்ரான் வைரஸ் என்றே பெயரிட்டுள்ளனர். அதேசமயம், இதன் அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலமாக இது வேகமாக நம் உடலை ஆட்கொள்ளாமலும், மிகுந்த பாதிப்பு ஏற்படுவதையும் நம்மால் தடுக்க முடியும்.
ஒமைக்ரான் - பொதுவான அறிகுறிகள்
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், மனித உடலுக்குள் நுழைந்த பிறகு நுரையீரலுக்கு பதிலாக மேல் மூச்சுக் குழாயைத்தான் ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பாதிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்தது. ஆனால், இதற்கு முன்பு கொரோனா வைரஸ் வடிவங்கள் பல நுரையீரலைத்தான் அதிகம் பாதித்தன.
Also read: குறைந்த பட்ஜெட்டில் அசத்தல் அம்சங்களுடன் கூடிய Smart Tv வாங்கணுமா? இதோ புது ரிலீஸ் வரப்போகிறது!
ஒமைக்ரான் ஸ்டீல்த் வைரஸை பொறுத்தவரையில் இரண்டு அறிகுறிகள் முக்கியமானவை. தொடக்க நிலையில் சோர்வு மற்றும் தலைசுற்றல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். சாதாரணமாக, ஒரு நாளில் தலைசுற்றல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் வேறு பல காரணங்களாலும் ஏற்படும் என்றாலும், இந்தப் பிரச்சினை ஒருசில நாட்கள் நீடித்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒமைக்ரான் ஸ்டீல்த் வைரஸ் உங்கள் உடலுக்குள் புகுந்த 2 அல்லது 3 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரிய வரும்.
கூடுதல் அறிகுறிகள்
காய்ச்சல்
மிகுந்த சோர்வு
இருமல்
கரகரப்பான தொண்டை
தலைவலி
அதிகமான இதய துடிப்பு
புதிய ஸ்டீல்த் ஒமைக்ரான் வகை வைரஸ் உங்கள் நுரையீரலை பாதிக்காது என்பதால், இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வரும் அறிகுறிகளான நுகரும் திறன் இழப்பு, சுவை அறியும் திறன் இழப்பு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. புதிய பிஏ2 வகை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால், சளி என்பதுதான் பொதுவான அறிகுறியாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தியிருந்தும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு இந்த அறிகுறி தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.