தமிழகம் முழுவதும் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதி.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதி.. பொதுமக்கள் மகிழ்ச்சி

மெரினா கடற்கரை

தமிழகம் முழுவதும் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை மெரினா கடற்கரையில், காலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் தமிழக அரசு, கடற்கரைகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரை பகுதியில் நடைபயிற்சி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதேபோல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கடற்கரையில் பயிற்சி மேற்கொண்டனர்.  மெரினா கடற்கரையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் கண்டுகளித்தனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயது மேற்பட்டோருக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு கவுன்டர்களில் டிக்கெட் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகளும், வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால், சுற்றுவட்டார பகுதி மக்கள் குடும்பத்தினருடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் படிக்க...கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

    ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் குளிக்கவும், பூஜை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. கார்த்திகை மாத சர்வ அமாவாசையையொட்டி தடை நீக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

    இந்நிலையில் குற்றாலம் அருவிகளில், இன்று முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: