மிரட்டும் கொரோனா.. உலகளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு..

கோப்புப் படம்

பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இங்கிலாந்தில் புதுவகையான கொரோனா பாதிப்பு தீயாய் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  சீனாவின் உஹான் நகரில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கு பரவி, மனித குலத்தையே மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா தொற்று தாக்கியுள்ளது, 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய கொரேனா தொற்று, இன்று வரை குறைந்தபாடில்லை, நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  கொரோனா நோய் தொற்றுக்கு முடிவு கட்டுவதற்காக இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் முதல் நபராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். உலக அளவில் ஒரு நாட்டின் பிரதமர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது இதுவே முதல் முறை.

  இந்நிலையில், பணக்கார நாடுகள் அதிகளவில் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பணக்கார நாடுகளுக்கு வெறும் 14 விழுக்காடு பங்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக உற்பத்தியாகவுள்ள தடுப்பூசிகளில் பாதியை பணக்கார நாடுகள் ஏற்கெனவே ஆர்டர் செய்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதனால், தடுப்பூசி கிடைப்பதில் ஏழை நாடுகள் பின்னுக்கு தள்ளப்படும் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏழை நாடுகளுக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 200 கோடி அளவிலான தடுப்பூசிகளை அதற்காக ஆர்டர் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

  ஏற்கனவே பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!

  இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். குறிப்பாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: