கையுறைக்கான பொருள்களைக் கொண்டு திருமண ஆடை! கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியருக்கு வீடியோ கால் திருமணம்

கையுறைக்கான பொருள்களைக் கொண்டு திருமண ஆடை! கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியருக்கு வீடியோ கால் திருமணம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: February 15, 2020, 3:49 PM IST
  • Share this:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியருக்கு அவருடன் பணிபுரிபவர்கள் வீடியோ கால் மூலம் திருமணம் நடத்தி வைத்த நெகிழ வைக்கும் சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

அபாயகரமான வைரஸ் தாக்குதலை சீனா எதிர்கொண்டுள்ள நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து அபயக்கரம் நீட்டியுள்ள மருத்துவ ஊழியர்கள் உற்றார், உறவினரைப் பிரிந்து இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா எதிர்ப்புக் களத்தில் காற்றிலே தன் தாயைக் கட்டியணைத்த குழந்தை, கண்ணாடித் தடுப்பின் வழியே தன் காதலிக்கு முத்தமிட்ட காதலர் என செவிலியர்களின் நெகிழ வைக்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வீடியோ காலில் நிகழ்ந்த இந்தத் திருமணமும் சேர்ந்திருக்கிறது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருபவர் டாங் ஸிங்ஸிங். குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டாங்குக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திடீரென்று பரவிய கொரோனா வைரஸால், ஊஹானில் மருத்துவப் பணி செய்ய அனுப்பப்பட்டார் டாங்.


மக்களுக்கு சேவை செய்து வரும் டாங்கை உற்சாகப்படுத்த விரும்பிய அவரது வருங்கால கணவர், டாங்கின் சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு மருத்துவமனையிலேயே தங்களது திருமண விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறினார். இதையடுத்து கையுறை, முகமூடி செய்யப் பயன்படும் பொருட்களைக் கொண்டு டாங்குக்காக சிறப்பு திருமண ஆடைகள் உருவாக்கப்பட்டன.

மருத்துவமனையில் மலர்கள் கிடைக்காததால் கையுறைகளைக் கொண்டு பொக்கேவை உருவாக்கினர் மருத்துவமனை ஊழியர்கள்.

திருமண விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், டாங்குக்கு அவரின் நண்பர்கள் அழைப்பு விடுத்தனர். இருள் சூழ்ந்த அந்த அறைக்கு வந்த டாங், திடீரென்று ஒளிர்ந்த செல்ஃபோன் வெளிச்சத்தைக் கண்டு திகைத்தார். திகைப்போடு அறைக்குள் நுழைந்த டாங்குக்கு திருமண ஆடையைக் கொடுத்து திக்குமுக்காட வைத்தனர் சக ஊழியர்கள்.அப்போது வீடியோ காலில் தோன்றிய தன் வருங்கால கணவரைக் கண்டு ஆச்சரியமடைந்த டாங், அவரின் ஏற்பாடுகளைப் பற்றி அறிந்து கொண்டார். தான் விரைவில் திரும்பி வந்து அவரைத் திருமணம் செய்து கொள்வதாக வருங்கால கணவரிடம் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் டாங். அங்கு மணமகனைப் போல மாறுவேடமிட்டிருந்த சக ஊழியர் திருமண உறுதிமொழியைப் படித்தார். "மக்களுக்கு சேவை செய்யும் தேவதையான உன் சிறகுகளில் நான் இறகுகளாக இருப்பேன்; எப்போதும் உனக்குத் துணையாக நடப்பேன்" என்று அவர் உறுதிமொழியைப் படிக்க டாங்கின் கண்கள் குளமாகின.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தன் சக ஊழியர்கள் செய்திருந்த திருமண ஏற்பாட்டைக் கண்டு நெகிழ்ந்த டாங், இப்படியொரு இன்ப அதிர்ச்சியை, தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும், கொரோனா வைரஸை முறியடித்து தாங்கள் விரைவில் வீடு திரும்புவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

A "hazmat suit wedding dress" and a bouquet of gloves marked the "video call wedding ceremony"👰 of a nurse in Wuhan, at the heart of #coronavirus epidemic, a day before #ValentinesDay ❤️ pic.twitter.com/1WSVkUn9kc
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading