மத்திய பிரதேச தலைநகர் போபால் மக்களவை தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கும் சுவாசக் குழாயை பசுவின் கோமியம் குணப்படுத்தும். எனவே, நாட்டு பசுவின் கோமியத்தை தினமும் அருந்த வேண்டும். நானும் அன்றாடம் பசு கோமியத்தை அருந்துகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இவருக்கு கடந்த டிசம்பர் 2020-ல் பிரக்யாவுக்கு
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, போபாலின் தென் மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.சர்மா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பசு கோமியம் கரோனாவை குணப்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை, மத்திய அரசின் முக்கிய அமைப்புகளான இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), மத்திய ராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகியவை ஏற்றுக் கொள்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். ஒரு பாட்டிலில் கோமியத்தையும் நிரப்பி கடிதத்துடன் அனுப்பினார் சர்மா.
அவர் தன் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனாவை பசு கோமியம் குணப்படுத்துவதாகக் கூறிய பிரக்யா, பாஜக.வின் மக்களவை எம்.பி. என்பதால் அவரது கருத்தை புறக்கணிக்க முடியாது. பசு அனைவருக்கும் ஒரு கோமாதா என்பதை நான் ஏற்கிறேன். அதன் பால், மிகவும் சத்தான உணவு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். பசுவின் கோமியமும், சாணமும் ஆன்மீக உணர்வுகள் கொண்டவை. ஆனால், இதை வைத்து நம் நாட்டின் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. எனவேதான் அதை பாட்டிலில் நிரப்பி தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
இனி கரோனா, கருப்பு பூஞ்சை தொற்றுகளுக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவற்றுக்கு பதிலாக பசு கோமியத்தை அளிக்க மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் முன்வருமா? என்று கூறியுள்ளார் பி.சி.சர்மா.
பசு கோமியம், எந்த நோயையும் குணப்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் ஏற்கெனவே கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.