உத்தரப் பிரதேசத்தின் மருத்துவமனை ஒன்றில் தந்தை இறந்தது தெரியாமல் 4 நாட்களாக தந்தைக்கு மகன் பழங்களை அனுப்பியிருக்கிறார். தந்தை இல்லை, இறந்து விட்டார் என்று மகனுக்குத் தெரியவர ஆஸ்பத்திரி நிர்வாகம் தந்தையின் உடலுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் அளித்த கொடுமை நடந்தேறியுள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அலகாபாத்திலுள்ள துமன்கன்ச் பகுதியை சேர்ந்தவர் லால் ஸ்வரூப். இவர், தனது உடல்நலம் குன்றிய 82 வயது தந்தை பச்சி லாலை அலகாபாத்தின் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.
ஏப்ரல் 12 முதல் கொரோனா சிகிச்சையில் இருந்த தந்தையை அன்றாடம் சந்திக்க மகன் ஸ்வரூப் அனுமதிக்கப்படவில்லை. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் ஸ்வரூபால் தன் தந்தையை பார்க்க முடிந்தது.
அவருக்கு தேவையானப் பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் ஸ்வரூப். பிறகு கடந்த ஏப்ரல் 19 இல் மருத்துவமனை சென்ற லால் ஸ்வரூபிற்கு அதிர்ச்சி காத்திருந்தது, தன் தந்தை இருந்த படுக்கையில் வேறு ஒருவர் இருந்திருக்கிறார்.
உடனே விசாரித்துப் பார்த்துள்ளார் மகன். அப்போது அவர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற போதும் தந்தையைக் காணவில்லை. இதனையடுத்து மகன் ஸ்வரூப் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஏப்ரல் 17ம் தேதியே தந்தை பச்சிலால் இறந்து போன தகவல் கேட்டு மகன் ஸ்வரூப் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். உடலுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழை கொடுத்துள்ளது மருத்துவமனை.
பச்சிலால் உடலை மருத்துவமனையே எரித்து விட்டது. இதனையடுத்து மகன் ஸ்வரூப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் தன் தந்தை இறந்ததை மறைத்ததையும் தான் அவர் இறந்தது தெரியாமல் மருத்துவமனைக்கு தந்தைக்காக பழங்கள் அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளதோடு மருத்துவமனை மீது தீவிர நடவடிக்கை கோரியுள்ளார்.
குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடைசி முகமுழி கூட கிடைக்காமல் ஆஸ்பத்திரி நிர்வாகம் இப்படி நடந்து கொண்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பல அவலங்கள், கொடுமைகள் வட இந்திய மருத்துவமனைகளில் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.