கோவிஷீல்ட், கோவாக்சின் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவு

கோவிஷீல்டு தடுப்பூசி

கொரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்ய உள்ளது.

 • Share this:
  இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்குஉடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து முதல்முறையாக ஐசிஎம்ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதுகுறித்து சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்று நோயியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டாக்டர் தருண் பட்நாகர் கூறுகையில் “45 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்துஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

  இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, கரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளத்தான்.

  நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்தவாரத்திலிருந்து தொடங்கலாம். கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்:

  இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா முழு ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள், பொதுமக்களின் விழிப்புணர்வு ஆகியவவை காரணமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

  சில தினங்களுக்கு முன்னர் நோய் தொற்றின் தினசரி பாதிப்பு 40 நாட்களுக்குப் பின்னர் சரிவடைந்து 2 லட்சத்துக்கு கீழே வந்தது.நேற்று 2,08,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093 ஆக உயர்வடைந்துள்ளது.

  நோய் பாதிப்பால், நாட்டில் 3,847 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்வடைந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: