தமிழகத்தில் 8ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 8ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும்13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் 8ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நாடு முழுவதும் தற்போது வரை 70க்கும் மேற்பட்டோருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனால் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றின் அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், தடுப்பூசி விநியோகிக்கும் பணி 13ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

    மேலும் சென்னை, மும்பை, ஹரியானாவின் கர்னல், கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளதாகவும், மேலும் 37 இடங்களில் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவின் என்ற செயலியின் ஆன்லைன் பதிவின் அடிப்படையில் யாருக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற தரவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஊசிகள் செலுத்தப்பட உள்ளன.

    இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் வரும் 8ம் தேதி முதல் பரவலாக நடைபெறும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க...தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

    சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் எனக் கூறிய அவர், 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு எவ்வளவு கால அளவு ஆகிறது என்பதை கணிக்க சென்னையில் உள்ள தடுப்பூசி மையத்தில்,தனி ஒத்திகை நடத்தப்படும் என்றும் கூறினார்.

    முன்னதாக, கடந்த 2ம் தேதி நாடு முழுவதும் முதல்கட்டமாக 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்ற ஒத்திகை வெற்றி பெற்றதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: