தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் முக்கிய தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுவருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி போடும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க முடியவில்லை.

  முன்னதாக, மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கடந்த வாரம் பிரதமர் அறிவித்தார். இதையடுத்து லட்சக்கணக்கானோர் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தனர்.

  இந்நிலையில், கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்திருந்த பலருக்கு முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசிகள் கைவசம் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த இயலாது என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தெரிவித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

  இதற்கிடையில், கோவையில் பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மையத்தில் இன்று வழக்கம் போல பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மட்டும் இன்று போடப்பட்டது. முதல் டோஸ் போடுவதற்காக வந்த பொது மக்கள் சிலர் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அப்போலோ, ஃபோர்டிஸ், மேக்ஸ் உள்ளிட்ட 3 தனியார் மருத்துவமனைகள், முக்கிய நகரங்களில் உள்ள தங்கள் கிளைகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளன. மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 800 முதல் 900 ரூபாயும், கோவேக்சின் தடுப்பூசிக்கு 1,200 முதல் 1,250 ரூபாயும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை அப்போலா மருத்துவமனையில் முன்பதிவு செய்தோர் காத்திருந்து தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: