நாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நாளை தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

 • Share this:
  இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கான அவசர கால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள 'கோ-வின்' செயலியையும் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

  நாடு முழுவதும் 2,934 மையங்களில், மூன்று லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் அந்தந்த மையங்களில் இருந்து, காணொலி காட்சி மூலமாக பிரதமரிடம் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கோடியே 65 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்கள பணியாளர்களை தொடர்ந்து, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 166 மையங்களில், முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 நபருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இப்பணிகளை மதுரையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

  கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களே போட்டுக் கொள்ள வேண்டும் எனவும்,கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக்கூடாது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் ஏற்கனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும், தடுப்பூசி செலுத்த வேண்டிய நாளில் சளி, இருமல் இருந்தால் அன்றைய தினம் தடுப்பூசி போடுவதை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் லேசான வலி, தடிப்பு ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

  மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.பிரபலமான நிறுவனமே தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், தேவையற்ற அச்சத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

  கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தற்போது போட்டுக் கொள்ளலாம் என முன்கள பணியாளர்களை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வந்த பிறகே அதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும், மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: