கொரோனா அச்சம் காரணமாக நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் 3-வது முறையாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அனைத்துத் துறை அலுவலகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.03.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே திட்டமிட்டது போக புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31.03.2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்
திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும் குறைந்த அளவில் மக்கள் கூடினால் கொரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள்,விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை 31-ம் தேதி வரை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொரோனா தாக்கம் : சினிமா, சீரியல் ஷூட்டிங் ரத்து - ஆர்.கே.செல்வமணி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.