CoronaVirus : 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - மத்திய அரசு தகவல்

கொரோனா தடுப்புப் பணி

இந்தியாவில் 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றும், நாட்டின் 98 சதவீதத்தினர் இன்னும் கொரோனா பாதிப்பு அபாயத்தில் இருப்பவர்கள்தான் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும் கூட மக்கள் தொகையில் 2 சதவீதத்துக்கும் குறைவானோருடன் நம்மால் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.

    மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1.8 சதவீதத்தினர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 சதவீதத்தினர் இன்னும் கொரோனா பாதிப்பு அபாயத்தில் இருப்பவர்கள்தான்.

    கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 13 ஆம் தேதி சிகிச்சை பெறுவோர் விகிதம் 17.13 சதவீதமாக இருந்தது.

    ஆனால், இப்போது அது 13.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 22 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

    உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் புதிய பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்த மாநிலங்களில் பாதிப்பு விகிதமும் குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் நாட்டின் 199 மாவட்டங்களில் கொரோனாவின் புதிய பாதிப்புகளும், பாதிப்பு விகிதமும் குறைந்திருக்கிறது.” இவ்வாறு கூறினார்.

    இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2,63,533 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. எனினும் மரணம் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Must Read :  ‘அம்மா, நீங்க பொய் சொல்றீங்க..’ - மகனிடம் உண்மையைச் சொல்ல முடியாத தாயின் தவிப்பு- அடுத்தடுத்து இரட்டையர்கள் மரணத்தால் பெற்றோர் கதறல்

     

    தமிழகத்தில், ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 364 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: