Home /News /coronavirus-latest-news /

கொரோனா பரவல்: இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்க அரசிடம் பதில் உண்டா?

கொரோனா பரவல்: இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்க அரசிடம் பதில் உண்டா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊஹானில் நடந்த உலக ராணுவ விளையாட்டுப் போட்டிக்கு வந்த அமெரிக்க வீரர்கள் மூலம் சீனாவில் கொரோனா பரவியிருக்கலாம் என்கிறது சீனா.

சீனாவின் ஊஹான் நகரிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் வேகவேகமாகப் பரவிய கொரோனா வைரசால் இன்று உலகமே அச்சத்தில் உறைந்துபோயுள்ளது. அது பரவத் தொடங்கியதில் இருந்து அதனுடைய தோற்றம், பரவல் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. ஏராளமான சதிக் கதைகள் அதையொட்டி பரப்பப்பட்டு, அவை மக்களிடையே குழப்பங்களையும் பீதியையும் ஏற்படுத்தி யிருக்கின்றன.

சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்களால்தான் இந்த வைரஸ் உருவாகியிருப்பதாக தொடக்கத்தில் செய்திகள் பரவியதை நாம் பார்த்தோம். அவர்கள் பாம்பு, வெளவால் போன்றவற்றைச் சாப்பிட்டதன் மூலம் கொரோனா நோய் ஏற்பட்டதாகச் சொன்னது முதல், ஊஹானில் பாங்கோலின்ஸ் எனச் சொல்லப்படும் எறும்புண்ணியை உட்கொண்டதன் வழியாக இந்த நோய் பரவியது எனும் தகவல் வரை சமூக ஊடங்களில் வைரலாகின.

அதன் பின்னர், ஊஹான் நகரில் சீனா தன் எதிரி நாடுகளை ஒழித்துக்கட்டும் கொடிய நோக்குடன் உருவாக்கிய வைரஸ் அங்கிருந்து எதிர்பாராத விதமாக வெளியேறியதால் இந்த அசம்பாவிதம் ஏற்படுவதாகச் செய்தி உலாவியது. அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் தளத்தில் ஃபிப்ரவரி 22 அன்று ஸ்டீவன் மாஷர் எனும் சமூக அறிவியலாளர் எழுதிய கட்டுரையில் இதே செய்தியைச் சொன்ன பிறகு, அது மேலும் வீச்சுடன் உலகமெங்கும் எதிரொலித்தது.

எனினும், ஸ்டீவன் மாஷர் தனது வாதத்துக்கு வலுவான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அந்தத் தொற்று ஊஹானிலுள்ள ஒரு மீன் மார்கெட்டில் இருந்து பரவியது. அந்த மார்கெட்டுக்கும், ஊஹானிலுள்ள அந்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்துக்கும் 10 மைல் தொலைவுதான் இருக்கிறது என்பதை மட்டுமே அவர் சுட்டிக்காட்டினார். சீனாவின் குற்றச்செயலை நிறுவ அவருக்கு அது மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது போலும்!

தொடர்ச்சியாக சீனா மீதான எதிர்ப்புணர்வை தன் குடிமக்களிடையே வளர்த்தெடுக்கும் அமெரிக்க அரசுக்கு இது சாதகமாகிப் போனது. ட்ரம்ப் அரசு அமெரிக்கர்களிடம் சீனாவை வில்லனாக நிறுத்தி தன் நிர்வாகத் தோல்விகளை மூடிமறைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுக்கு பதில் தந்தது. ஃபிப்ரவரி 27 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீன மருத்துவ சங்கத் தலைவராக இருந்தவரும் நுரையீரல் நிபுணருமான ஜோங் நான்ஷன், “கோவிட்-19 முதலில் சீனாவில் கண்டறியப்பட்டாலும், அதன் பிறப்பிடம் சீனாதான் எனச் சொல்ல முடியாது” என்றார். இதன் மூலம் வெளியிலிருந்து அது உள்ளே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பதை அவர் சூசகமாகச் சுட்டிக்காட்டினார். இதைப் போல, ஜனவரி மாதம் சீனாவின் முதன்மை ஆய்வாளர்களாகவும் மருத்துவர்களாகவும்  கருதப்படுபவர்கள் ‘தி லன்செட்’ எனும் பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வேட்டில் எழுதிய கட்டுரையிலும் கூறியிருந்தனர்.

அதேசமயம், சீனாவின் உயர் அதிகாரிகள் இவர்களைப் போல் அல்லாமல் மிகவும் நேரடியாகவே அமெரிக்காவை குற்றம் சுமத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊஹான் நகரில் நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் 300 அமெரிக்க வீரர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வையொட்டி சீனாவில் கொரோனா பரவலுக்கான வேலை நடந்திருக்கிறது என்பது அவர்களுடைய வாதமாக இருந்தது.

இந்த மாதிரியான கடும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அமெரிக்கா சீன எதிர்ப்புப் பிரச்சாரங்களின் மூலம் பதில் தந்தது. ஆம், அந்நாட்டு உள்துறை செயலர் மைக்கேல் பாம்போ கொரோனாவை “ஊஹான் வைரஸ்” என்றார். அதிபர் ட்ரம்ப் அதை ”சீன வைரஸ்” என்றார். இது அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் இதுவொரு வெறுப்புப் பிரச்சாரம் என்றும் கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், மைக்கேல் பாம்போ ஆதாரம் எதையும் முன்வைக்கவோ சீனாவை சாடுவதை நிறுத்திக்கொள்ளவோ இல்லை. சீனாவுக்கு ஈரான் உடந்தையாக இருப்பதாக இன்னொரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர்.

இதனிடையே சீனாவும் ஈரானும் இந்த வைரஸ் பரவியதில் அமெரிக்காவின் பங்கு இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன. அமெரிக்கா தங்கள் மீது நிகழ்த்தும் ’Bio war’ என ஈரான் கருதுகிறது. ஏனெனில், ஈரானில் உயர் பதவிகளில் இருந்தவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள்.

மார்ச் 11ம் தேதி ’நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையத்தின்’ இயக்குநர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் கூறும்போது, அமெரிக்காவில் நிகழ்ந்த சில மரணங்கள் சாதாரண காய்ச்சலால் நேர்ந்தன என கணித்தோம்; ஆனால் உண்மையில் அவை கோவிட்-19 என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்தார்.

அதற்கு மறுநாள் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தன் ட்விட்டர் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பினார். அமெரிக்காவில் எப்போதிலிருந்து கொரோனா தொடங்கியது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள், அவர்களை அனுமதித்த மருத்துவமனைகளின் பெயர்கள் யாவை எனக் கேட்டார். அத்தோடு, அமெரிக்காவின் ராணுவத்தினர் ஊஹானுக்கு இந்தக் கொள்ளை நோயைக் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறிய அவர், அமெரிக்காவை வெளிப்படைத்தன்மையோடு  நடந்துகொள்ளுமாறும் பொதுவெளியில் இது குறித்த தரவுகளை முன்வைக்குமாறும் கோரினார்.

ஜார்ஜ் வெப் எனும் அமெரிக்கப் புலனாய்வுப் பத்திரிகையாளர், மாட்ஜே பெனஸ்ஸி என்கிற ஓர் அமெரிக்கப் படை வீரர் பெயரைக் குறிப்பிட்டு, அவர் ஊஹானில் நடந்த உலக ராணுவ விளையாட்டுப் போட்டிக்கு வந்ததாகவும், அவர் மூலம் சீனாவில் கொரோனா பரவியிருக்கலாம் என்றும் கூறினார். இந்தக் கூற்று தனது சந்தேகத்துக்கு வலுசேர்ப்பது போல அமைந்ததாக சீனா கருதுகிறது.

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஐநா சபை பாராட்டு தெரிவித்திருந்தாலும், உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக அமெரிக்கா அந்நாட்டை சாடுகிறது. உலகம் கொரோனாவை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருவகையில் சீனா உதவிபுரிந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர்.

சீன ஆய்வாளர்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சார்ந்த ஆய்வாளர்களும் கொரோனா பரவியதில் உள்ள அமெரிக்காவின் பாத்திரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். மரிலெண்டில் உள்ள ’அமெரிக்காவின் ராணுவ மருத்துவ ஆய்வு மையத்தில்’ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி நோய்க்கிருமிகள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதால் அது தடுக்கப்பட்டது. இது தவிர, கிருமிகளையும் வைரசையும் அமெரிக்கா உருவாக்குவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்ற ஆண்டு அக்டோபர் 18 அன்று நியூயார்க் நகரில், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, உலக பொருளாதார மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து ’சுகாதார பாதுகாப்புக்கான ஜான் ஹோப்பின்ஸ் மையம்’ ஏற்பாடு செய்த ’ஈவெண்ட் 201 என்கிற நிகழ்வில், கொள்ளை நோய்ப் பரவலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த நோய்க்கான பெயராக “நோவல் கொரோனா வைரஸ்” என்பதையே அவர்கள் வைத்திருந்தார்கள். உலக ராணுவ விளையாட்டு சீனாவில் நடைபெற்ற தேதியோடு இந்த நிகழ்வின் தேதியும் பொருந்திப் போவதால் பல சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. எனினும் இந்தப் பெயர் தற்செயலானது என அந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா மீது இப்படியான சந்தேகங்கள் வலுப்பெற அதன் கடந்த காலப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம் . 1945ல் ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதில் தொடங்கி வட கொரியா, வியட்நாம், ஈராக் போன்ற நாடுகள் மீது Biological weapon எனச் சொல்லப்படும் வகையிலான ஆயுதங்களைப் பிரயோகித்தது வரை உலகின் கண் முன்னாலேயே அமெரிக்கா நிகழ்த்திய குரூரங்களை யாராலும் மறக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. தற்போது மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் கொரோனாவால் உலகம் திண்டாடும் வேளையில் கூட கியூபா, வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகள் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கவோ தளர்த்தவோ இல்லை என்பது கவனம் கொள்ளத்தக்க அம்சம்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, கொரோனாவை உருவாக்கி அதைத் தன் எதிரி நாடுகளின் மீது அமெரிக்கா ஏவியிருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிட முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவும் ஈரானும் முதன்மை இடத்தைப் பெறுவது அந்த சந்தேகத்துக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. ஆகவே, அமெரிக்க அரசு சீனா மீது மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், தன் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு அது முறையாக பதிலளிக்க வேண்டும்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published:

Tags: China, CoronaVirus, Donald Trump, United States of America

அடுத்த செய்தி