சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது. சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் பெரிய அலையாக பரவிய கொரோனா, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் இருந்துதான், அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சென்னையில் 37 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் வெறும் 9.77 சதவீதம் மட்டுமே.
சென்னையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 1,12,059 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 98,736 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது, 88 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர். எனவே, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10,953ஆக குறைந்துள்ளது.
அதேபோல், நாள்தோறும் 2,000க்கும் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மதுரையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 ஆக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக நூறுக்கும் குறைவாக எண்ணிக்கை காணப்படுகிறது. திருச்சியிலும் மாத தொடக்கத்தில் 359 ஆக இருந்த புதிய பாதிப்பு, தற்போது 50க்கும் கீழ் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் ஒன்றில் 607 ஆக இருந்த புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது நூறை ஒட்டியே உள்ளது.
மேலும் படிக்க...
சொத்து தகராறில் பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலைசெய்த தந்தை..
கொரோனாவை எவ்வாறு கையாள்வது என தற்போது தெரிந்து கொண்டதால், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், மக்களும் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றினால், கொரோனா தாக்கத்தின் அடுத்த அலையை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.