சர்வதேச அளவில் உயிரிழப்பு 22,000.. பாதிக்கப்பட்டோர் 5 லட்சம்... உலகை உலுக்கும் கொரோனா

சர்வதேச அளவில் உயிரிழப்பு 22,000.. பாதிக்கப்பட்டோர் 5 லட்சம்... உலகை உலுக்கும் கொரோனா
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா பெருந்தொற்றின் வேகம் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.

இதில் சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய 5 நாடுகளில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகம். மொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் சரிபாதி அளவுக்கான உயிரிழப்புகள் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன.


வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகளவாக நியூயார்க் மாகாணத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தாலியில் 7 ஆயிரத்து 503 பேரும், ஸ்பெயினில் 4 ஆயிரத்து 89 பேரும், சீனாவில் மூவாயிரத்து 287 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரானில் 2 ஆயிரத்து 234 பேரும், பிரான்சில் ஆயிரத்து 331 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 36 பேரும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற இந்திய சமையல்கலை நிபுணரான FLOYD CARDOZ,கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார். நியூஜெர்ஸி மருத்துவமனையில் உயிரிழந்த அவருக்கு, அமெரிக்கா வாழ் இந்தியர்களும், உணவுபிரியர்களும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ நெருங்கி வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதும், ஆஸ்திரேலியாவில் இதுவரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அந்நாட்டைச் சேர்ந்த பலரும் ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

25ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள பிரான்சில், நடைபயிற்சி செல்வோர் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமான ஊகானில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சீனா அறிவித்துள்ளது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்