திருக்கோவிலூரில் கொரோனாவினால் உயிரிழந்த மூதாட்டி: உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கொரோனாவினால் உயிரிழந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  ஆற்றுப்பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  திருக்கோவிலூரில் 65 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

  இதனையடுத்து மூதாட்டியின் உடலை திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் புதைக்க முடிவெடுத்தனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டியின் உடல் வந்த ஆம்புலன்ஸை முற்றுகை இட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கொரோனா பாதிப்பில் இறந்தவர் உடலை ஆற்றுக்கு அருகே புதைப்பதால் தொற்றுப் பரவ வாய்ப்பிருப்பதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதுவரை இந்தப் பகுதியில் 4-5 பேரை புதைத்திருக்கிறார்கள் ஆனால் அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை, அதே போல் என்ன ஆழம் தோண்டி புதைக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. மேலும் ஆற்றில் ஊற்று சுரக்கும் இடம் அது என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கொரோனா நோயாளிகளின் உடல் உரிய பாதுகாப்புகளுடன் தான் அடக்கம் செய்யப்படுவதாகவும் இதனால் குடிநீர் மாசு ஏற்படாது என்று உறுதியளித்தனர். இதனையடுத்து மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  இந்நிலையில் அப்பகுதி மருத்துவ வட்டார அலுவலர் தனியார் தொலைக்காட்சி மூலம் கேட்டுக் கொள்ளும் போது, கொரோனாவினால் இறந்தவர்கள் உடலைப் புதைக்கும் போது உரிய வழிமுறைகளுடன் பாதுகாப்பு முறைகளுடன் நன்றாக ஆழம் தோண்டி அதில்தான் புதைக்கப்படுகிறது, எனவே யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று நம்பிக்கையூட்டினார்.
  Published by:Muthukumar
  First published: