கொரோனா கட்டுப்பாடு: சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறையினர் வேதனை

கோயம்பேடு மார்க்கெட் - கோப்புப்,படம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

  • Share this:
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட பெரிய ஆலைகள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு, குறு, நடுத்தர தொழில் கூடங்கள் இரவு நேரங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இத்தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வர்த்தக நகரமான கோவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கினாலும், அவற்றில் 20 முதல் 30 சதவீத ஆலைகள் மட்டுமே 3 ஷிப்ட்கள் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்கள் இரவு நேரங்களில் செயல்பட விதிக்கப்பட்ட தடையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கடும் பாதிப்பில் இருந்து கடந்த 3 மாதங்களாக தொழிற்சாலைகள் நல்ல முறையில் இயங்கி வரும் சூழலில், மீண்டும் தடை விதிக்கப்பட்டால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்கின்றனர் தொழில்துறையினர்.

    கோவையில் இயங்கக்கூடிய பெரிய நிறுவனங்களுக்கு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான் உதிரி பாகங்களை தயார் செய்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால், தொழில் வளர்ச்சி தடைப்படும் என கருத்து எழுந்துள்ளது. பெரும் கடன் சுமை ஏற்பட்டு, தமிழகத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    வழக்கம் போல் அனைத்து ஆலைகளும் செயல்பட தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தொழிற்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: