மாஸ்க்கா அப்படின்னா என்ன? ஓ...! முகமூடியா...? கவலைக்கிடமான நிலையில் கண்ணகி நகர்

மாஸ்க்கா அப்படின்னா என்ன? ஓ...! முகமூடியா...? கவலைக்கிடமான நிலையில் கண்ணகி நகர்
கண்ணகி நகர்
  • Share this:
மாஸ்க்கா அப்படின்னா என்ன? ஓ! முகமூடியா?அதெல்லாம் எங்ககிட்ட இல்ல; வாங்கவும் காசில்ல;யாரும் எங்களுக்கு கொண்டாந்து தரல... கண்ணகி நகர் வாசிகள் யாரிடம் கேட்டாலும் இதுதான் பதிலாக வருகிறது.

சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும்  குடியிருப்பு பகுதியில் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை. கொரோனா குறித்த அச்சமில்லை. இப்போதும் இயல்பான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகரில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். நகர்ப்புற மேம்பாடு, குடிசைகள் அகற்றுதல், சாலைகள் விரிவாக்கம், சுனாமி குடியிருப்பு என பல காரணங்களுக்காக சென்னையின் பூர்வகுடிகளாக இருந்த குடிசைவாழ் மக்களான இவர்கள் கண்ணகி நகரில் அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 19 ஆயிரம் வீடுகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு உள்ளன.


கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்த பகுதிக்குள் நுழைந்தால் இவர்களுக்கு கொரொனா பயமில்லையா?ஊரடங்கு உத்தரவு என்றால் தெரிகிறதா? முகக் கவசம் போடவில்லையே ஏன்?இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அடுக்குமாடி குடியிருப்புகளைப் போல நமக்குள் எழுந்து நிற்கின்றன.

காரணம் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும் கண்ணகி நகர் பகுதி முழுக்க யாருடைய முகத்திலும் மாஸ்க்கை பார்க்கவே முடியவில்லை. எல்லா வீட்டு வாசல் திறந்தே இருக்கின்றன.சமூக இடைவெளி என்றால் எதுவென அறியாமல் அனைவரும் கூட்டம் கூட்டமாக வீதிகள் கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள்,இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கும் இங்கும் கூட்டமாக உலாவிக்கொண்டு வழக்கம்போலவே இவர்களின் அன்றாட வாழ்க்கை கழிகிறது.

ஊரடங்கு உத்தரவால் மயான அமைதி நிலவும் சென்னை மாநகரில் கண்ணகி நகர் மட்டும் இப்போதும் கலகலப்பாகவே இருந்து வருகிறது.முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் என்ன? கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டியதன் தேவை என்ன? கொரோனா எப்படி பரவும்? சமூக இடைவெளி என்றால் என்ன? எதுவுமே இன்னமும் இவர்களுக்கு முழுமையாய் தெரியவில்லை. முகக் கவசம் எங்கே என்று கேட்டால், யாரும் எங்களுக்கு கொண்டு வந்து தரவில்லை. வாங்குவதற்கும் காசில்லை. அப்படி வாங்கச் சென்றாலும் கடைகள் இல்லை என்ற அடுக்கடுக்கான காரணங்களை  முன் வைக்கிறார்கள் இவர்கள்.

பெரும்பாலும் கூலிவேலை, ஆட்டோ ஓட்டுவது, வீட்டு வேலைக்கு செல்வது என்பதுதான் இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வருமானத்தை ஈட்டித் தருகிறது. இப்போது வேலையில்லாத காரணத்தால் வீடுகளுக்குள்ளேயே இருக்க முடியாமல் வீதிகளில் தான் இவர்கள் தங்கள் பொழுதைக் கழித்துக் கொள்கிறார்கள்.

கொரோனா குறித்த விழிப்புணர்வை இந்த மக்களுக்கு ஏற்படுத்துவது அரசின் மிக முக்கியமான கடமை. இல்லையென்றால் கொரோனா தன் வளையத்திற்குள் கண்ணகி நகரை கொத்து கொத்தாய் கொண்டு வந்து சேர்த்து விடும்.

மேலும் படிக்க: கொரோனா அச்சுறுத்தல்... பாதுகாப்பான உடலுறவுக்கு இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading