ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா பாதித்த பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்

கொரோனா பாதித்த பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்

மகப்பேறு தலைமை மருத்துவர் பிரபா

மகப்பேறு தலைமை மருத்துவர் பிரபா

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா தொற்று பரவாது அரசு மகப்பேறு மருத்துவர் விளக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட பிற மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்பியவர்கள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று வரை 232 பேர் திருவாரூர் மாவட்டத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் 1400 கர்ப்பிணித் தாய்மார்கள் பிரச வித்துள்ளனர்.

தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் பிரபா கூறுகையில், "கர்ப்பிணிப் பெண்கள் தங்களை பரிசோதிக்கும் முறைகள் சில உள்ளன. அதன்படி கர்ப்பிணிப் பெண்கள் சென்னை போன்ற வெளி ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பி இருந்தால் தங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது காய்ச்சல் இருமல் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் தங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் ”பிரசவத்தின் போது மருத்துவர்கள் குழந்தை பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் செய்கின்றோம். அதன்பிறகு கொரோனா பாதிப்புக்குள்ளான தாயிடமிருந்து குழந்தையை தனிமைப்படுத்தி தாய்க்கு காய்ச்சல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் இல்லை என்றால் தாயிடமிருந்து தாய்ப்பாலை பெற்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குழந்தைக்கு வழங்குகிறோம்.

அதேபோல் அறிகுறி உள்ள தாயிடமிருந்து தாய்ப்பாலை பெறுவதில்லை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து தாய்ப்பாலை பெற்று குழந்தைக்கு வழங்கி வருகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தைகள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற்று குழந்தைக்கு பால் பவுடர் வழங்குகிறோம்.

மேலும் படிக்க...

இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த சீன ராணுவ ஜெனரல் உத்தரவு - அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

குழந்தை பிறந்த ஐந்து நாள் கழித்து கொரோனா பரிசோதனை குழந்தைக்கு செய்கின்றோம். கொரோனா பாதித்த தாய்க்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துவிட்டால் பின்னர் குழந்தையை தாயிடம் அனுமதிக்கிறோம். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் தாய்மார்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் வீட்டிற்கு சென்ற பிறகும் முகக் கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வலியுறுத்துகிறோம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர்,”கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அச்சமடையத் தேவையில்லை. தங்களை பரிசோதனை செய்துகொண்டு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்களுக்கு சத்தான உணவுகள் மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கி தைரியமாக இருக்க அறிவுரைகளை வழங்குகிறோம். பொதுவாக கொரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல கர்ப்பிணி பெண்கள் உள்ள வீடுகளில் வசிக்கும் உறவினர்கள் தாங்கள் வெளியில் சென்று வந்தாலும் கூட முகக் கவசம் சானிடைசர் போன்ற உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் இப்படி செய்தால் நிச்சயமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus