பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் புனே-வில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவிவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவை ஆய்வுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தினேஷ்குமாருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 21-ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து வந்த 2,390 பேர் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதுவரை மேற்கொண்ட சோதனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த இருவர், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தினேஷையும் சேர்த்து 5 பேருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்தவர் கடந்த மாதம் 28-ம் தேதியும், தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் கடந்த 16-ம் தேதியும், சென்னையைச் சேர்ந்தவர் 17-ம் தேதியும் தமிழகத்துக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு புதிதாக எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றும், விரிவான ஆய்வுக்காக இவர்களது மாதிரிகளை புனேவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தினேஷ்குமாரின் மாதிரிகளுக்கான முடிவுகள் இரண்டு நாட்களில் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.