இளைஞர்கள் அஜாக்கிரதையாக செயல்பட வேண்டாம் - தனுஷ் வீடியோ

தனுஷ்

 • Share this:
  கொரோனா எனக்குப் பரவாது என்று இளைஞர்கள் அஜாக்கிரதையாக செயல்பட வேண்டாம் என்று நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “இந்த கொரோனா நம்மை உலுக்கி விட்டது. 3 மாதத்துக்கு முன்பு வரை நமக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் இருப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. நம் பிரதமர் கேட்டுக் கொண்டதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும்.

  அப்படி இருப்பதன் மூலம் நம்முடைய மருத்துவர்களும், அரசும் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் அவர்களது உயிரை மட்டும் பணயம் வைத்து போராடவில்லை. அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் உயிரையும் பணயம் வைத்து போராடுகிறார்கள்.

  இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான் வீட்டிலேயே இருப்போம். நம்மால் முடிந்தவரை செய்வோம்.

  சுய ஊரடங்கு முடிந்த பின்பும் கூட மிக மிக அவசியம் என்றால் மட்டுமே தேவையான முன்னேற்பாடுகளுடன் வெளியே செல்ல வேண்டும். இல்லையெனில் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சிறந்தது.

  இளைஞர்கள் என்பதால் கொரோனா பரவாது, உயிருக்கு ஆபத்து இல்லை என்ற அஜாக்கிரதை ஒரு சில இளைஞர்களிடம் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள். கொரோனா பரவ நீங்கள் காரணமாக மாறிவிடாதீர்கள். உங்கள் குடும்பத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடாதீர்கள். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

  மருத்துவர்கள், அரசு சொல்வதை கடைபிடிக்கவும். நமக்காக பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.  மேலும் படிக்க: பிரதமரின் அறிவிப்புக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - ரஜினிகாந்த் வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: