15 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு: 32 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு - உலக நிலவரம் என்ன?

கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை நெருங்கியுள்ளது.

 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 கோடியே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிப்பில் இருந்து 12 கோடியே 94 லட்சம் பேர் மீண்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 32 லட்சத்தை நெருங்கி வருகிறது.

  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் எனவும், இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வரக் கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

  இதேபோல், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் லிங்க் சேவையை பயன்படுத்தி தோஹா வழியாக ஆஸ்திரேலியா வருவதாகவும், இதனால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடாது என அறிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை, தடையை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 48 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்நிலையில், ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கும் செலுத்த அனுமதி வழங்குமாறு ஐரோப்பாவிடம் விண்ணப்பித்துள்ளது. ஃபைசர் தடுப்பூசி தற்போது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27 நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறுவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  அத்துடன், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிகட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: