கொரோனா 2வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கொரோனா 2வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி

பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என்றார் பிரதமர் மோடி.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 94 நாட்களில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில், 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 14,38,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அனைத்து பூங்காக்களும் வியாழக்கிழமை முதல் மூடப்படுகின்றன. கன்காரியா ஏரி மற்றும் மிருகக்காட்சி சாலைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் இந்தூரில், மறு உத்தரவு வரும் வரை, இரவு நேர ஊரடங்கை கடைபிடிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

    இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியில் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மும்பை, புனே, சென்னை உள்ளிட்ட 70 மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் நோய் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் மீண்டுள்ளதாகவும், பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என குறிப்பிட்டார். அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் கூறினார்.

    இதற்கிடையே, சென்னை ராஜீவ்காந்திஅரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் 19 மாநிலங்களில் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருப்பதாகவும், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

    மேலும் படிக்க.... தமிழகத்தில் மீண்டும் 1000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு...

    சென்னையில், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அடையார்,  உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கண்காணிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published: