கொரோனா 2-வது அலையால் உலக நாடுகளில் மீண்டும் ஊரடங்கு.. தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு..

கொரோனா 2-வது அலையால் உலக நாடுகளில் மீண்டும் ஊரடங்கு.. தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு..

போர்ச்சுகலில் அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற செவிலியர்

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமெடுத்துள்ள நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஜெர்மனியில் ஒரே நாளில் 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் முன்பை விட வேகமெடுத்துள்ளதால், அங்கு தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கல் அறிவுறுத்தியுள்ளார்.

  பிரேசிலின் மனாஸ் நகரில் 180 நாட்கள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளை தவிர்த்து, மற்ற நிறுவனங்களை மூட உத்தரவிட்டதோடு, உணவகங்கள், பார்களுக்கு மார்ச் இறுதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பும் அதிகரித்துள்ளதால், கல்லறைகளில் இரவு, பகல் பாராமல் உடல்கள் கொண்டுவரப்படுகின்றன. இதனால், அந்த நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

  துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும், 10 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என, அந்நாட்டு சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, அமெரிக்காவில் கிராமி விருது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  போர்ச்சுகல் நாட்டில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் ஒருவர், 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ட்டோ நகரில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சோனியா என்பவர், திங்கட்கிழமை ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பக்க விளைவுகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் திடீரென உயிரிழந்திருப்பது தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

  மேலும் படிக்க...தமிழகத்தில் 8ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

  இதனிடையே, ஊகானில் இருந்து கொரோனா தொற்று பரவியது எப்படி என ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் அனுப்பிய குழுவிற்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. மூத்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பீட்டர் எம்பரேக் தலைமையிலான குழுவை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என சீனா கூறியிருப்பதால், இது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: