• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நிலையின்றித் திண்டாடும் கட்டுமானத்துறை: அரசு தலையிட கோரிக்கை..!

நிலையின்றித் திண்டாடும் கட்டுமானத்துறை: அரசு தலையிட கோரிக்கை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா பாதிப்பின் தாக்கத்தை ஆய்வு செய்த பின்னரே குவாரிகள் இயக்குவதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

  • Share this:
தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை தனிமனித இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடித்து தொடங்கலாம் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சில இடங்களில் பணிகள் தொடங்கினாலும், தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

மாவட்டங்களில் கட்டுமான பணிகள் இன்று முதல் தொடங்கின. இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய கட்டுமானர்கள் சங்கத் தலைவர் ராமபிரபு "கட்டுமானத் தொழில் தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தாலும் கூட தற்போது பல நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். கட்டிட வேலை செய்வதற்கான தொழிலாளர்கள் இருந்தாலும் அதை மேற்பார்வை செய்யும் சூப்பர்வைசர்கள், மேலாளர்கள் வேலை நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

ஆனால், வேலை இடத்திற்கு செல்வதற்கான பாஸ் கடந்த சனிக்கிழமையே விண்ணப்பித்தும் இன்று வரை கிடைக்கவில்லை. லாரியில் செங்கல் எடுத்து வந்தால் அதில் ஓட்டுனர் உட்பட இருவர் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒரு லோடு செங்கல் இறக்க குறைந்தது 4 தொழிலாளர்கள் தேவை. வேலையாட்களுக்கான அனுமதிச் சீட்டு கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். இதன் காரணமாக சென்னையை சுற்றி மட்டும் 5000 கட்டுமானப் பணிகள் துவங்க முடியாமல் உள்ளதாக கூறுகிறார்.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை செய்வதற்கான அனுமதிச் சீட்டு பெறுவதில் சிக்கல் இருந்து வரும் நிலையில் கட்டுமானப் பொருட்களும் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லையைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் சாலமோன் தனசிங் " ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தத் துறை பெரிதும் நலிவடைந்திருந்தது. கட்டுமான பொருட்கள் விலையேற்றம் எங்களை பெரிதும் பாதித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பாக என்ன விலையில் ஒரு வேலையை ஒப்புக்கொண்டோமோ அதே விலைக்கு இப்போது வேலையை செய்து முடிக்க இயலவில்லை. ஒரு சுற்றுச்சுவர் கட்ட அடி ஒன்றிற்கு 850 ரூபாய் ஆகும். ஆனால், இப்போது 1,050 ரூபாய் செலவாகிறது. மொத்த விற்பனையில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ 60 முதல் 80 ரூபாய் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

சில்லரை வியாபாரத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ 120 அதிகமாக விற்கப்படுகிறது. இந்த நிலையை வீடு கட்டும் உரிமையாளர்களுக்கு தெரிவித்தால் இப்போதைக்கு வேலையைத் தொடர வேண்டாம் என்கின்றனர். ஆனால், பழைய நிலைமை திரும்ப நீண்ட நாள் ஆகும். இந்த ஊரடங்கு காலத்தை பயன்டுத்தி ஏற்கெனவே தேக்கி வைத்திருந்த பழைய சரக்குகளை பல விற்பனையாளர்கள் எங்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர்.

இதற்கு காரணம் கேட்டால் உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் பொருட்களின் உற்பத்தியை துவக்கவில்லை என்று பதிலாகத் தெரிவிக்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் நாங்கள் ஆரம்பித்த இடத்திற்கே சென்று விடுவோம். பல பொறியாளர்கள், கட்டுமான தொழிலாளர்களின் அன்றாடத் தேவைக்கு கூட பணம் சம்பாதிக்க  முடியாத நிலை ஏற்படும் என்கிறார்.

பல இடங்களில் விற்பனையாளர்கள் 3 மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சிமெண்டை விற்று வருகின்றனர்.  இத்தகையை சிமெண்ட்டின் உறுதித்தன்மை 20% குறைவானதாகவே இருக்கும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு இருந்து வந்தது. தற்போது 40 நாட்களாக எந்த பணிகளும் நடக்காத நிலையில் எம்.சாண்ட் ஒரு யூனிட்டிற்கு கூடுதலாக 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் சிறுதொழில் இயந்திர கல் உடைப்போர் சங்கத் தலைவர் ரவி நம்மிடம் பேசியபோது " க்ரஷர் யூனிட்களை திறப்பதற்காக இணையதளத்தில் அனுமதிகோரினால் எங்கள்  பதிவேற்ற முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்குமாறு கூறினார்கள்.

அரசு அறிவித்தபடி வேலையத் துவக்கிவிடலாம் என்று பணியாளர்களை வரவழைத்து, இயந்திரங்களை தயார்படுத்தி வைத்துள்ளோம். விரைவில் நாங்கள்  பணியை தொடங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது மணல் குவாரிகளும் செயல்படவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் மணல் குவாரிகள் செயல்படும் பகுதிகளில் உள்ள கொரோனா பாதிப்பின் தாக்கத்தை ஆய்வு செய்த பின்னரே குவாரிகள் இயக்குவதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புள்ள கட்டுமானத்துறை மீண்டெழுவதற்கான அனைத்து வகையான ஆதரவுகளையும் அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டுமானத் துறை சார்ந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: