MK Stalin : மதுரை, திருச்சி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார்.

  • Share this:
    கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றிரவு மதுரை வந்தடைந்தார். இன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    அதன்பின் காலை 11 மணியளவில் தோப்பூர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு திருச்சியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐந்து மாவட்டங்களுக்கான சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கினார்.

    சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்றடைந்த அவர், சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து, கொரோனா சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சேலம் உருக்காலையில் இருந்து சிறப்பு சிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.

    இதனைத் தொடர்ந்து, சேலம் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார். பின்னர், சேலத்தில் வாகனத்திலேயே மயங்கி விழுந்த மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்ணை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார். சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த சுசீலாவை அவரது மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வாகனத்திலேயே மயங்கினார். கொரோனா அச்சத்தால் அவர்களுக்கு உதவ யாரும் முன்வராத நிலையில், இளையராணி என்பவர் மூதாட்டி சுசீலா மருத்துவமனைக்கு செல்ல உதவினார்.

    Must Read : பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை - மம்தா பானர்ஜி

     

    இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார். அங்கு அவரை சந்தித்த பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிலதிபர்கள், முதல்வர் நிவாரண நிதிக்காக 32 கோடி ரூபாயை வழங்கினர். பின்னர் கொடிசியா வளாகத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் குமரகுரு கல்லூரியில் 800 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.
    Published by:Suresh V
    First published: