தீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்... கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்

முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாலும், பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது என்று முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. அதேநேரம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என அச்சம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்

    முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:

    மக்கள் அலட்சியம்:

    கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் ஏற்கனவே பல்வேறு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது. மாவட்ட நிர்வாகம் கவனமாக இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளியிலே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்குகின்றபொழுது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிற்குச் சென்றவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இவற்றை தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம், இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இப்பொழுது தமிழகத்தில் 35 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது.

    எனவே, அனைவரும் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், இந்த நோயினுடைய தன்மை, அறிகுறி மற்றும் வீரியத்தை உணராமல் இருக்கும் காரணத்தினால்தான், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆகவே, மாவட்ட நிர்வாகம் கவனமாக செயல்பட்டு, அனைவரையும் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும்.

    இப்பொழுது தீபாவளி பண்டிகை வரவிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றார்கள். காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

    கொரோனா வைரஸ் நோய் இருக்கின்ற பகுதிகளில், தொடர்ந்து கிருமிநாசினி தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பருவமழை துவங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பருவமழை துவங்குகின்ற இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.

    அரசு அறிவித்த பசுமை வீடு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அப்பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிகின்றனவா என்றும், அப்படியில்லையென்றால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவை எல்லாம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணி. அதேபோல், நியாய விலைக் கடைகளின் அத்தியவாவசியப் பொருட்கள் முழுவதும் மக்களுக்கு தங்குதடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    தீபாவளிக்குள்...
    கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒருசில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100-க்கு கீழ் கொண்டுவர வேண்டும். இன்னும் சில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் இருக்கிறது, அதை 50-க்கு கீழ் குறைக்க வேண்டும். 50-க்கு கீழுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான பணிகளை நீங்கள் (ஆட்சியர்கள்) செய்ய வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை, காவல் துறை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றிய காரணத்தினால், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Yuvaraj V
    First published: