• HOME
 • »
 • NEWS
 • »
 • coronavirus-latest-news
 • »
 • தொடரும் குழந்தை விற்பனை: தூத்துக்குடியில் விற்கப்பட்ட குழந்தை மீட்பு

தொடரும் குழந்தை விற்பனை: தூத்துக்குடியில் விற்கப்பட்ட குழந்தை மீட்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மூன்றரை வயது பெண் குழந்தையை, அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம், 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் பிறந்த பச்சிளங்குழந்தைகளை விற்றதாக செவிலி அமுதவள்ளி கைதானார். அவருடன் சேர்ந்து பலர் தற்போது வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஓராண்டு கழிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் குழந்தை விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

  நாகப்பட்டினத்தில் பிறந்த இந்த பெண் குழந்தை, தற்போது கோவில்பட்டி அருகே உள்ள ஊரில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

  குழந்தையை விற்றவர் யார்? குழந்தை மீட்கப்பட்டது எப்படி?

  நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஷ்ரஃப் அலி. இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவி பிரிந்து சென்று விட்டதால், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வழியின்றி, உறவினர் ஒருவர் வீட்டில் மகனை வளர்த்து வந்தார்.

  இரண்டரை வயது மகளை ஆட்டோ ஓட்டுநர் அசைன் முகமது என்பவர் மூலம் மதராசாவில் சேர்க்க உதவி கேட்டார். அசைன் முகமது, மதுரை நெல்பேட்டையில் உள்ள மதரசாவில் சேர்த்து விடுவதாகக் கூறி அழைத்துச் சென்று விட்டார். மதரசாவில் சேர்த்து விட்டதாகவும் தந்தையிடம் கூறி விட்டார்.

  கடந்த ஓராண்டாக மகளைப் பார்க்க வேண்டும் என அஷ்ரப் அலி கேட்டபோதெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வந்தார் அசைன் முகமது. ரம்ஜான் அன்று குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அஷ்ரப் அலி வலியுறுத்த, அசைன் முகமது வேறு வழியின்றி மதுரை நெல்பேட்டையில் குழந்தை இருப்பதாகக் கூறியுள்ளார்.

  கையில் காசில்லாததால், தனது சொந்த ஊரான நாகூரில் இருந்து திருவாரூர் வரை தனது மகனைத் துாக்கிக் கொண்டு நடந்தே சென்றுள்ளார் அஷ்ரப் அலி.

  திருவாரூரில் தெரிந்தவர்களிடம் உதவி கேட்க அவர்கள் அ‌ஷ்ரப் அலி மற்றும் குழந்தையை கார் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

  மதுரை நெல்பேட்டை சென்று பார்த்தபோது அங்கு மகள் இல்லை என்பதை அறிந்த அ‌ஷ்ரப் அலி அதிர்ச்சி அடைந்தார்.

  அசைன் முகமதுவை போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தையை விற்று விட்டதாகவும், தொடர்ந்து போன் செய்தால் காவல் துறையில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது

  பதற்றமடைந்த அஷ்ரப் அலி, உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினயை நேரில் சந்தித்து புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக குழந்தையை மீட்டுக் கொடுக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கணேசனுக்கு உத்தரவிட்டார்.

  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், போலீசார் ஆகியோர் அசைன் முகமதுவைப் பிடித்து விசாரித்தபோதுதான் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது

  மூன்றரை வயது பெண் குழந்தையை சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது சாலியாபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார் அசைன் முகமது

  அசைன் முகமதுவின் வாக்குமூலத்தின் பேரில், கோவில்பட்டி லாயல் மில் பகுதி்க்கு சென்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

  மீட்கப்பட்ட குழந்தை தூத்துக்குடியில் உள்ள முத்துக்குவியல் என்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அசைன் முகமதுவைக் கைதுசெய்த போலீசார், அவர் வேறு எந்தக் குழந்தையையாவது விற்றாரா என விசாரித்து வருகின்றனர்.

  விலைக்கு வாங்கிய குழந்தை என்றாலும், பாசத்தைக்கொட்டி வளர்த்த பெண், குழந்தையைப் பிரிய முடியாமல் அழுத காட்சி, பார்ப்போரை நெகிழ வைத்தது.

  Also see...

  திருமழிசை சந்தையில் விற்பனையாகாத காய்கறிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் கேரட், கத்தரி, வெண்டை


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: