MK Stalin : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி மே 20ம் தேதி முதல் செலுத்தப்படும் என்றும், தடுப்பூசி போடுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக 10 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றில் 9 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகள் தமிழகம் வந்துள்ளன. இதில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், 7 லட்சத்து 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் அடங்கும்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இரண்டு நாள் பயணமாக, ஐந்து மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதன்படி, காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலத்திற்கு செல்லும் முதலமைச்சர், அங்குள்ள இரும்பாலை பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி தொழிற்பேட்டையில் ஆய்வு செய்கிறார்.

    Must Read : இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள்

     

    தொடர்ந்து கோவை கொடிசியாவிலும், குமரகுரு கல்லூரியிலும் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். இதையடுத்து இரவு மதுரைக்கு செல்லும்  ஸ்டாலின், மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்கிறார். இதன்பின்னர் திருச்சி மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
    Published by:Suresh V
    First published: