• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • MK Stalin : சேலத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைளைக் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

MK Stalin : சேலத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைளைக் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலத்தில் மு.க.ஸ்டாலின்

சேலத்தில் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். அத்துடன், 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 07.05.2021 முதல் இன்று வரை 71,417 சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான 8,768 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 7,432 நபர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட சேலம் மாவட்டத்தில் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என மொத்தம் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 1,583 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

    தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 2,770 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுத்திடவும், ஊரடங்கினை கண்காணித்திடவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனியாக உள்ளார்களா என்பதை கண்காணிக்கவும், கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலனை கண்காணித்திடவும், சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24*7 கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக 26 கோவிட் பராமரிப்பு மையங்களும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் 9 கோவிட் பராமரிப்பு மையங்களும் மற்றும் நகராட்சி பகுதிகளில் 3 கோவிட் பராமரிப்பு மையங்கள் ஆக மொத்தம் 38 கோவிட் பராமரிப்பு மையங்கள் (கோவிட்கேர் சென்டர்) துவக்கப்பட்டுள்ளது.

    மேலும், சித்த மருத்துவத் துறையின் சார்பில் சேலம் - 8 அரசு மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் 100 படுக்கை சித்த மருத்துவ கோவிட் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் நோயாளிகளின் சிகிச்சைக்கு இன்று (20.05.2021) துவக்கப்படுகிறது.

    மேலும், முதன் முறையாக தடையின்றி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம், உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருந்தகம், தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு செய்து மேலும் இம்மையத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமெனவும், 10 நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

    Must Read : மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல்!

     

    இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். கார்மேகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: