சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... சென்னையிலிருந்து செல்வதற்கு எவ்வளவு பணம் தெரியுமா? - அதிர்ச்சி தரும் கள நிலவரம்

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த சென்னை மக்கள் பலர், பல்லாயிரம் ரூபாய் செலவழித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... சென்னையிலிருந்து செல்வதற்கு எவ்வளவு பணம் தெரியுமா? - அதிர்ச்சி தரும் கள நிலவரம்
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக
ஐ.டி.பணியாளர்கள் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை கடுமையான வாழ்வாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்கள் நாடறிந்த ஒன்று. வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சென்னையிலிருந்து சாரை சாரையாக தங்கள் மாநிலங்களை நோக்கி சென்றனர். பின்னர் அரசு சார்பில் ரயில்கள் இயக்கப்பட்டு லட்சக் கணக்கானோர் ஊர் திரும்பியுள்ளனர்.


இது ஒரு புறமிருக்க, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பிழைப்புக்காக சென்னைக்கு புலம்பெயர்ந்த மக்களும் தற்போது பிழைக்க வழியில்லாமல் தங்கள் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி செல்பவர்கள் எவ்வளவு செலவு செய்து செல்கின்றனர் என்ற உண்மை தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு நாளை (16/06/20) இரவு 7 மணிக்கு பஸ் தயாராக உள்ளது. 35 சீட்டு மட்டுமே கொடுக்கப்படும் வாட்ஸ் அப்பில் வந்த தகவலில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம்.

"சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை செல்ல வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு கட்டணம்" என்று கேட்டதற்கு,"ராஜபாளையம் அல்லது தென்காசி மட்டும் தான் ஸ்டாப். ஒரு ஆளுக்கு 6,000 ரூபாய். இரண்டு பேருக்கு 12,000 ரூபாய்.வண்டலூர் பூங்கா அருகில் பஸ் தயாராக இருக்கும். சரியாக 7 மணிக்கு வந்துவிடுங்கள். பயணம் செய்ய உள்ள அனைவருக்கும் இ பாஸ் ஏற்பாடு செய்து விடுவோம். உங்கள் ஆதார் விபரங்களை உடனடியாக எங்களுக்கு வாட்ஸ்அப் செய்துவிட வேண்டும்" என்று பதில் சொன்னார் அந்த நபர்.

மேலும், "இன்று இரவுக்குள் பாஸ் கிடைத்து விடுமா பத்திரமாக ஊர் சென்று விட முடியுமா?" என்று கேட்டதற்கு,"இ பாஸ் ஆபீசில் ஆள் இருக்கிறது. உடனடியாக பெற்று விடலாம். வண்டலூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவலரின் தம்பிக்கு சொந்தமான வாகனம் தான். இதுவரை 200 நபர்களை அழைத்து சென்றுள்ளோம். இப்போது 12 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக இது கடைசி வாகனம்.

எனவே, உங்களை எந்த பிரச்சனையும் இன்றி, பத்திரமாக ஊருக்கு அழைத்து சென்று விடுவோம்" என்றார்.
"6000 ரூபாய் அதிகமாக உள்ளதே... குறைக்க முடியாதா...?" என்று கேட்டதற்கு,"பாஸ் வாங்க வேண்டும். உங்களை பிரச்சனை இல்லாமல் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும். எல்லாத்துக்கும் சேத்து தான் சார் இந்த பணம். வருகிறீர்கள் என்றால் உடனடியாக விபரங்களை அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

இதே போன்று ஒரு தனியார் வாகனம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்ற ரேணுகா கூறுகையில்,"சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 23 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.

ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் விடுப்பில் இருக்க சொல்லியது கல்லூரி நிர்வாகம். சென்னையில் மாதம் 8,000  ரூபாய் வாடகை கொடுத்து ஹாஸ்டலில் தங்கி இருந்தேன்.இந்நிலையில், மூன்று மாதமாக சம்பளம் இல்லாததால் ஹாஸ்டல் வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே, ஹாஸ்டலை காலி செய்து கொண்டு தற்போது சொந்த ஊருக்கே வந்து உள்ளேன்" என்றார்.

மேலும், ஊருக்கு செல்வதற்கு வழி இல்லாததால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தனியார் வாகனத்தில் மொத்தம் 12,000 ரூபாய் செலவு ஊர் வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.
இவ்வளவு கட்டணம் செலுத்த முடிந்தவர்கள் ஊருக்கு செல்கிறார்கள். இயலாதவர்கள், தங்கள் வீடுகளையே காலி செய்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நகரும் அவலங்களும் தலைநகரில் சத்தமில்லாமல் நிகழ துவங்கியுள்ளது.


மேலும் படிக்க...

சீன ராணுவம் உடன் மோதல் - தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading