• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் 3.47 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர் - அரசு தரப்பில் தகவல்

சென்னையில் 3.47 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர் - அரசு தரப்பில் தகவல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 3.47 லட்சம் பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபி. அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பவர்கள், பூச்சித் தடுப்புத் துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 33,198 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சி மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல்நலனை 14 நாட்களுக்கு தொலைபேசி மூலம் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். சென்னை மாநகராட்சி நகர சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நோய் பாதிப்பு அதிகம் வாய்ப்புள்ளதாகக்  கணக்கிடப்பட்ட 3,47,380 நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி Helpage India நிறுவனத்துடன் இணைந்து முதியோர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் ஒரு தன்னார்வலர் சராசரியாக 100 முதியோர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து தேவையானவற்றை அறிந்து, உரிய தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 100 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருந்து (ஆர்சனிக் ஆல்பம்) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 லட்சம் நபர்களுக்கான ஹோமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரையின் பேரில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணியினாலான தலா 3 முகக்கவசங்கள், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்குதல், வீடு வீடாகச் சென்று தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுத்தல், வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: