சென்னையில் காய்ச்சல் முகாம்களை தொடங்கியது மாநகராட்சி நிர்வாகம்

கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சென்னையில் காய்ச்சல் முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில், சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக காய்ச்சல் முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

  குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படும் இந்த முகாமில், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நோட்டீஸ்களும், கையேடுகளும் விநியோகிக்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையறிய வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதிக்கின்றனர்.

  காய்ச்சல் முகாமிற்கு வருபவர்களுக்கு அடிப்படை மருந்துகளும், ஆக்சிஜன் அளவை கண்டறிய பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் சோதனையும் நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அந்த இடத்திலேயே மாதிரி சோதனையும் செய்யப்படுகிறது. மொத்தம் 200 வார்டுகளில் நடைபெறும் காய்ச்சல் முகாமில், 16000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  அதேபோல, திருச்சியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு காய்ச்சல் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 3500-லிருந்து, 4500 வரை ஆர்.டி - பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் 150க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையை தொடர்ந்து திருச்சியிலும் வீடு வீடாக காய்ச்சல் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  Published by:Ram Sankar
  First published: