நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ரிப்பன் மாளிகையில் கண்காணிப்புக் குழுவின் பணிகளைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “30 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரி என 3 பேர் இருப்பார்கள். தேவையில்லாத கூட்டங்கள் எங்கு இருக்கிறது? உத்தரவை மதிக்காமல் இருப்பவர்கள் யார் யார்? என்பதனை இந்தக் குழு கண்காணித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதனால் யாரும் வெளியே வரவேண்டாம்.
மக்களுக்கு உணவுதட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு சப்ளை செய்து வரும் தனியார் ஏஜென்ஸிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமையல் செய்து உணவுகளை எக்காரணம் கொண்டும் விநியோகம் செய்யக்கூடாது.
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், உதவி செய்ய நினைப்பவர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை அணுகி அரிசி, பருப்பு என கெட்டுப்போகாத பொருட்களை வழங்கலாம்.
மாநகராட்சி சார்பாக வங்கி கணக்கு துவக்கி உள்ளோம். அதில் நிதி உதவி அளக்கலாம்.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவையான இருப்புகள் அம்மா உணவகத்தில் வைத்துள்ளோம். ஒரு வார்டுக்கு 2 உணவகங்கள் இருக்கின்றன. ஏழை மக்களுக்காக இந்த உணவகங்கள் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இது தவிர 4 பெரிய கிச்சன்கள் இருக்கின்றன. 25 ஆயிரம் பேருக்கு இங்கு சமைக்கலாம்.
இந்த பறக்கும் படை குழுவினர் சுமார் 7 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள். மக்களை தண்டிப்பது நோக்கம் இல்லை. எல்லாம் மக்களின் பாதுகாப்புக்காகத்தான். பயம் உணர்ச்சி கொடுத்தால் தான் சமூகத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உருவாகும்.
முதியோர் இல்லங்களில் உணவு செல்வதாக இருந்தால் அதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள். 60 இரவு காப்பகங்கள் சென்னையில் இருக்கின்றன. மக்கள் அனைவரும் இந்த ஊரடங்கை ஏற்று எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
மேலும் படிக்க: குப்பையை எடுக்கத் தெரியாதா? எனக் கூறி தூய்மைப் பணியாளரை சாக்கடைக்குள் தள்ளி அடித்து உதைத்த குடும்பத்தினர்..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.