டூலெட் நகரமாக மாறுகிறதா சென்னை? வீடு, கடைகளில் தொங்கும் பூட்டுகள்... உண்மை நிலவரம் என்ன?

கொரோனா அச்சத்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழலாலும் சென்னையில் வாடகைக்கு குடியிருந்த ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு புறநகர் பகுதிகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றதால் டூலெட் போர்டுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

டூலெட் நகரமாக மாறுகிறதா சென்னை? வீடு, கடைகளில் தொங்கும் பூட்டுகள்...  உண்மை நிலவரம் என்ன?
டூலெட் நகரமாக மாறுகிறதா சென்னை
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட அடுத்தடுத்த ஊரடங்குகளால், சென்னைக்கு பிழைக்க வந்த வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட புலம்பெயர் மக்கள் ஏராளமானோரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தது சிங்கார சென்னை.

இது தொடர்பாக,சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் ஒன்றான கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், "என்னுடைய 10 வீடுகளில், 5 வீடுகள் கடந்த மூன்று மாதங்களில் காலியாகியுள்ளன. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர்கள் சம்பளம் இல்லாததால் காலி செய்து விட்டனர். தனது ஒரே மகளின் வருமானத்தில் வசித்து வந்த வயதான பெண், தற்போது  மகளுக்கு வருமானம் இல்லாததாலும், திருமணம் ஆனதாலும் புறநகர் பகுதிக்கு குறைந்த வாடகைக்கு சென்று விட்டார்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்த இன்னொரு நபர் தொழில் முடங்கியதால் வாடகை கொடுக்க இயலாது என்று காலி செய்து விட்டார். மீதமுள்ள நபர்களும் மார்ச் மாதத்திற்கு பிறகு வாடகை கொடுக்கவில்லை. அவர்களிடம் வற்புறுத்தி கேட்கவும் முடியவில்லை" என்றார். மேலும், "இந்த வீடுகளுக்கு மாதம் 35,000 ரூபாய் லோன், வீட்டு வரி, தண்ணீர் வரி, கரண்ட் பில் கட்ட வேண்டும். என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு லோன் கட்ட வேண்டும். என் வயதான தாயாருக்கு மருத்துவ செலவுகள், ஒரு வயது குழந்தை மற்றும் மனைவியை கவனிக்க வேண்டும். ஏற்கனவே, கொரோனா அச்சத்தால் குழந்தையையும், மனைவியையும் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டேன். நானும் அம்மாவும் வேறு வழியில்லாமல், வீடுகளை பராமரிக்க வேண்டுமே என்று இங்கு இருக்கிறோம்" என்றார்.அத்தியாவசிய மருந்து, காய்கறி, பலசரக்கு கடை தவிர்த்து பல்வேறு கடைகளை வைத்திருந்தவர்கள் தொடர் வருமான இழப்பால் தங்களது கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமல் காலி செய்து கொண்டிருக்கின்றனர். சூளைமேட்டில் உள்ள கடை உரிமையாளர் சிவா கூறுகையில்,"எனக்கு உள்ள மூன்று கடைகளில் இரண்டு கடைகள் காலியாகி விட்டன. மீதமுள்ள ஒரு கடை மெடிக்கல் ஷாப் என்பதால் அது இன்னும் காலியாகவில்லை.

8,000 ரூபாய் வாடகையில் ஹார்டுவேர் வியாபாரம் செய்து வந்த நபர் தன்னால் இதற்கு மேல் கடை நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடையை காலி செய்து விட்டார். இன்னொரு கடை காலி செய்து மூன்று மாதமாகி விட்டது. இந்த கடைகளின் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டே குடும்பம் நடத்தி வந்தேன். இப்போதைக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்கு இதே நிலமை நீடிக்கும் என்கிறார்கள். இனி வரும் நாட்களில் எப்படி நகர்த்துவது என்று தெரியவில்லை" என்றார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாமல் கொரோனா ஒரு புறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா. மறுபுறம், ஐ.டி துறை துவங்கி நடைபாதை வியாபாரிகள் வரை அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் சத்தமில்லாமல் விழுங்கிக் கொண்டிருக்கிறது ஊரடங்கு.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading